
posted 11th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சோழர்கால பழமைமிக்க தாலி திருகோணேஸ்வரத்தில் களவு
திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் சோழர் காலம் தொட்டு பாதுகாக்கப்பட்டுவந்த அம்மன் தாலி களவாடப்பட்டுள்ளதென பக்தர்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இரத்தின, வைர கற்கள் பதிக்கப்பட்டதும் 5 பவுண் உடையதுமான அந்தத் தாலி பல நூறு வருடங்கள் தொன்மம்மிக்கது. பல கோடி ரூபாய் மதிப்புமிக்க இந்தத் தாலி கடந்த வாரம் திருடப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.
எனினும், இந்தத் திருட்டு தொடர்பில் ஆலய நிர்வாகத்தால் எந்தவொரு முறைப்பாடும் செய்யப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இந்த விவகாரம் தொடர்பில் மாவட்ட செயலரின் கவனத்துக்குக் கொண்டு சென்ற பக்தர்கள், பொலிஸ் முறைப்பாடும் அளித்துள்ளனர். இதையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதனிடையே, தாலி திருட்டு தொடர்பில் கிழக்கு ஆளுநரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. அவரும் இது விடயத்தில் தலையிட்டு பொலிஸாருக்கு பணிப்புரைகளை வழங்கியுள்ளார் என்று தெரிய வருகின்றது.
இந்தத் தாலி திருட்டுப் போன விவகாரம் பொதுமக்களிடையே பலவித குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)