
posted 10th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சபுமல்கஸ்கட விகாரை திறக்கப்படுகிறது
வவுனியா சிங்கள குடியேற்றத்தின் பௌத்த - சிங்கள அடையாளமாக நிறுவப்பட்ட சபுமல்கஸ்கட விகாரை எதிர்வரும் 31 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் வவுனியாவின் கொக்கச்சாங்குளம் - ஊற்றுக்குளத்தில் தொல்லியல் என்ற பெயரில் இந்த விகாரை அமைக்கும் பணி ஆரம்பமானது.
திருகோணமலை துறைமுகம் ஊடக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட புத்தரின் புனித தந்தம் அநுராதபுரம் கொண்டு செல்லும்போது சபுமல்கஸ்கட வழியாகவே பயணித்தது என்று கல்கமுவ சாந்தபோதி தேரர் கூறுகிறார். இதற்கு ஆதரமும் என்றும் அவர் கூறுகிறார்.
இந்தப் பிக்குவே, குருந்தூர் மலை ஆதிசிவன் ஆலயத்தை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையின் விகாரதிபதியாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், வவுனியா வடக்கில் சிங்கள குடியேற்றங்கள் நிறுவுவதை அரசாங்கம் வேகப்படுத்தியது.
வவுனியாவின் குடியேற்றங்கள் கச்சல்சமளங்குளம், முதலிக்குளம், ஊற்றுக்குளம், கொக்கச்சாங்குளம் ஆகிய தமிழ் கிராமங்களின் எல்லைக்கோட்டின் வழி நகர்ந்து வவுனியா வடக்கின் வெடிவைத்தகல்லு வரை பரவலாக்கப்பட்டு தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு (வெலிஓயா) சிங்கள குடியேற்றங்கள் வரை பரவி வருகின்றது. இந்தப் பகுதி தற்போது, சம்பத்நுவர பிரதேச செயலகமாக மாற்றப்பட்டு அதற்குள் வவுனியா சிங்கள குடியேற்ற கிராமங்களை இணைக்கும் பணி நடக்கிறது.
அந்த வகையில் இந்த சிங்கள பிரதேச செயலக பிரிவில் ஊஞ்சல்கட்டி, மருதோடை, பட்டிக் குடியிருப்பின் பெரும் பகுதிகள் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு செறிவாக பரவலாக்கப்படும் ஆக்கிரமிப்பை மையப்படுத்தி அதன் பௌத்த - சிங்கள அடையாளமாக சபுமல்கஸ்கட விகாரை நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)