
posted 19th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கொக்குத்தொடுவாய் புதைகுழி இன்று கவனவீர்ப்பு போராட்டம்
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி முன்பாக இன்று (20) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு கவனவீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் முல்லைத்தீவு மாவட்ட சங்கத்தின் அழைப்பின்பேரில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
கொக்குத்தொடுவாய் புதைகுழி மூடப்பட்டமை, காணாமல் போனோர் பணிமனை (ஓ. எம். பி.) அதிகாரிகள் தமது சங்கத்தினரை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டமை என்பவற்றை கண்டித்தே இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாயில் கடந்த 2023 ஜூன் 29ஆம் திகதி தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தண்ணீர் குழாய் அமைப்பதற்காக கிடங்கு வெட்டியபோது மனித எலும்புக்கூடுகள் வெளிப்பட்டன. இதைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி முன்னிலையில் புதைகுழி தோண்டப்பட்டது. இதன்போது, 52 எலும்புக்கூடுகள், இலக்கத் தகடுகள், சயனைற் குப்பி, தோட்டாக்கள் எனப் பல பொருட்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையில், கடந்த ஜூலை 16ஆம் திகதி நீதிமன்றின் உத்தரவின்படி புதைகுழி மூடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)