
posted 28th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஒவ்வொரு ஜனாதிபதியிடமும் எமக்கு ஏமாற்றமே கிட்டுகிறது
இலங்கையில் தெரிவு செய்யப்படுகின்ற ஒவ்வொரு ஜனாதிபதியிடமும் காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கான நீதியை கேட்டுக்கொண்டே இருக்கிறோம். இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை. இவ்வாறு மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட செயலகம் முன்பாக நேற்று (27) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளான நாங்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக வீதியில் நின்று போராடி வருகிறோம். ஆனால், எங்களை ஒருவருமே திரும்பி பார்ப்பதாகத் தெரியவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பணிமனை ஊடாக உண்மையை கண்டறிவோம் எனக் கூறுகின்றபோதும். இதுவரை உண்மையை கண்டறிய யாரும் முன்வரவில்லை. ஆனால், இழப்பீடு வழங்குவதற்காக மாத்திரம் முன்னுக்கு வருகின்றனர்.
எமது பிள்ளையின் உயிர் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியா? எங்கள் பிள்ளைகளை திருப்பி தந்தால் அவர்களுக்கு 4 இலட்சம் ரூபாயை எங்களால் தர முடியும். உயிருடன் ஒப்படைத்த பிள்ளைகளையே கேட்கிறோம் என்றார்
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)