ஐஸ் ரக போதை பொருளுடன் இருவர் மன்னாரில் கைது

மன்னாரில் ஐஸ் ரக போதை பொருளுடன் இருவர் தலைமன்னார் கொழும்பு அரச பேருந்தில் பயணித்தபோது மன்னார் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்னர்.

இச் சம்பவம் செவ்வாய் கிழமை (02) இரவு இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

அதாவது மன்னார் நகரின் பிரதான பகுதியில் மன்னார் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்கவின் பணிப்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ பண்டார, மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி சீ.ஐ. குமார பள்ளேவள, உதவி பொலிஸ் பரிசோதர்கள் ராமநாயக மற்றும் வணசிங்க ஆகியோரின் தலைமையில் சென்ற கோஷ்டினர் மேற்கொண்ட நடவடிக்கையில் இருவர் ஐஸ் ரக போதை பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் தலைமன்னார் கொழும்பு அரச பேருந்தில் இரவில் பயணித்தபோதே மன்னார் நகருக்குள் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவர்களிடமிருந்து 250 கிராம் ஐஸ் ரக போதை பொருளே கைப்பற்றப்பட்டது.

இவர்கள் இருவரும் புத்தளம் மற்றும் சிலாபத்துறையைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை மன்னார் பொலிசார் விசாரனைக்கு உட்படுத்தியதுடன் மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

ஐஸ் ரக போதை பொருளுடன் இருவர் மன்னாரில் கைது

வாஸ் கூஞ்ஞ