
posted 4th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஈ.பி.டி.பி அலுவலகத்துக்கு சென்ற ஜனாதிபதி ரணில்
யாழ்ப்பாணத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் நடந்த விசேட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (03) சனிக்கிழமை விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இதில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டத்தில் கலந்து கொண்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தாம் தொடர்ந்தும் பயணிப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது தெரிவித்தார். இந்த கூட்டத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பணிக்குழாம் பிராதானியுமான சாகல ரத்நாயக்க, கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி;
யாழ். மாவட்டத்தின் ஊடாக பொருளாதாரத்தை பலப்படுத்த எதிர்பார்க்கிறோம். அத்துடன் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இந்தியாவுடன் கலந்தாலோசிக்கிறோம். சீமெந்து நிறுவனம் இருந்த இடத்தில் முதலீட்டு வலயமொன்று ஆரம்பிக்கப்படும். பூநகரியிலும் அதனைச் செய்வோம். பலாலியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவோம். காற்று, சூரிய சக்தி மூலம் பெருமளவில் இங்கு மின் உற்பத்தி செய்ய முடியும். அதனால் மேலும் பல பொருளாதார நன்மைகள் கிடைக்கும்.
அத்துடன் எதிர்வரும் 10 வருடங்களுக்குள் யாழ்ப்பாணம் அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாற்றப்படும். எனவே, நாம் அடுத்தபடிய பொருளாதார யுத்தத்தை எதிர்கொள்ள ஆரம்பிப்போம். அதற்கான பணிகளை நாம் முன்னெடுக்க வேண்டும். அதற்கான முழுமையான ஒத்துழைப்பும் வடக்கின் மக்களிடம் இருந்து கிடைக்கும் என்றார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)