
posted 30th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இலங்கைத் தமிழர்களுக்கு புகலிடம் வழங்க பிரிட்டன் வெளியுறவு செயலர் கோரிக்கை
பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள டியாகோ கார்சியா தீவில் 2021ஆம் ஆண்டு முதல் சிக்கித் தவிக்கும் 61 இலங்கை தமிழர்களுக்கும் புகலிடம் வழங்குமாறு பிரித்தானிய வெளியுறவு செயலர் டேவிட் லாம்மி (David Lammy), உள்துறை செயலர் இவெற் கூப்பரிடம் (Yvette Cooper) கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து உள்துறை செயலாளருக்கு லாம்மி அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,
டியாகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்டவர்களில் சிலர் அண்மைய வாரங்களில் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஐ. நா. அகதிகள் முகமையால் வெளியிடப்பட்ட அறிக்கையில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொலைதூர தீவில் சிக்கித் தவிக்கும் 61 புகலிடக் கோரிக்கையாளர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த புகலிட கோரிக்கையாளர்கள் ஜி4எஸ் ஊழியர்களால் பாதுகாக்கப்பட்ட உதைபந்தாட்ட ஆடுகளத்தின் அளவு வேலியிடப்பட்ட பகுதியில் அடைக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அவர்கள் சமைத்து சாப்பிட அனுமதிக்கப்படவில்லை. எலிக் கடிக்கு ஆளாகியுள்ளனர். மேலும், அவர்களின் கூடாரங்களையும் எலிகள் துளையிட்டுள்ளன. அவர்களின் நடமாட்டம் கடுமையாகத் தடை செய்யப்பட்டதுடன், தீவிர கண்காணிப்பின் கீழ், குறிப்பிட்ட நேரங்களில் முகாமுக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கடற்கரைக்கு செல்ல அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்களில் பலர், டியாகோ கார்சியா மீதான அவர்களின் சட்டவிரோத தடுப்புக் கோரிக்கையை விசாரிக்க நீதிமன்ற தீர்ப்பின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
இங்குள்ள புகலிட கோரிக்கையாளர்கள், 2021 ஒக்ரோபர் மூன்றாம் திகதி டியாகோ கார்சியாவை வந்தடைந்தனர்.
அவர்கள் பயணித்த கப்பல் இந்தியப் பெருங்கடலில் சிக்கலில் சிக்கியபோது இரண்டு ரோயல் கடற்படை கப்பல்களால் மீட்கப்பட்ட பின்னர் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், புகலிட கோரிக்கையாளர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், அனைத்து தனிநபர்களும் சர்வதேச பாதுகாப்புக்கான நிலுவையில் உள்ள கோரிக்கைகளை ஆணையாளர் ஏற்றுக்கொள்வதால், சர்வதேச சட்டத்தை மீறி இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)