இலங்கை தமிழர்கள்  6 பேர்  அகதிகளாக  தஞ்சம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் உயிரை காப்பாற்றி கொள்ள படகு மூலம் அகதிகளாக தனுஷ்கோடி மணல் திட்டில் பல மணி நேரம் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 6 பேரை ஹேவர் கிராப்ட் ரோந்து கப்பல் உதவியுடன் பத்திரமாக மீட்ட மரைன் பொலிஸார் அவர்களை அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து சென்று விசாரணைக்கு பின் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்தனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்துக்குள் அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர்.

இந் நிலையில் நேற்று முன் தினம் இரவு வவுனியா மாவட்டம் பறையாளங்குளம் பகுதியைச் சேர்ந்த பாலசுகந்தன், அனுஜா,லிங்கேஸ்வரன் மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட 6 பேர் ஒரு படகில் புறப்பட்டு நேற்றுக் காலை சுமார் 5 மணி அளவில் தனுஷ்கோடி ஒன்றாம் மணல் திட்டில் வந்திறங்கினர்.
இதையடுத்து ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் மண்டபம் கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்து ஹேவர் கிராப்ட் ரோந்து கப்பல் உதவியுடன் குழந்தைகளுடன் பல மணி நேரம் மணல் திட்டில் உணவின்றி தவித்த இலங்கை தமிழர்கள் ஆறு பேரையும் பத்திரமாக மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி மண்டபம் அகதிகள் முகாம் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

தங்களை அழைத்து வந்த படகு தனுஸ்கோடி முதல் திட்டில் இறக்கிவிட்டுச் சென்றதாகவும், பல மணி நேரம் உணவின்றி கடும் காற்றுக்கு மத்தியில் உயிரை பாதுகாத்து கொண்டு நாங்கள் அணிந்திருந்த உடைகளை காட்டி அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களிடம் காப்பாற்றுமாறு உதவி கோரினோம். இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பலில் எங்களை பொலிஸார் பத்திரமாக உரிய நேரத்தில் மீட்டனர். கால தாமதமாகி இருந்தால் நிச்சயம் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அகதியாக வந்த இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தமிழர்கள்  6 பேர்  அகதிகளாக  தஞ்சம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)