
posted 5th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
அளவெட்டியில் கொடூரமாகக் கொல்லப்பட்ட குழந்தை
கை, காலை முறித்தும் தலையில் காயம் ஏற்படுமளவுக்கு சித்திரவதை செய்தும் பிறந்து 45 நாட்களேயான குழந்தை கொல்லப்பட்டதனை பிரேத பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது.
அளவெட்டியை சேர்ந்த சசிரூபன் நிகாஷ் என்ற குழந்தையே இவ்வாறு கொல்லப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
பிறந்து 45 நாட்களேயான குழந்தை பால் குடித்த சில மணி நேரத்தில் மயக்கமுற்றதாகக் கூறி அளவெட்டி பிரதேச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அங்கிருந்து தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டது. ஆனால், குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குழந்தையின் மரண விசாரணையை நடத்திய திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் குழந்தையின் உடலில் காயங்கள், தளும்புகள் இருக்கின்றமையை கண்டு, பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
பிரேத பரிசோதனையில் குழந்தையின் கை, கால் முறிக்கப்பட்டதும், தலையில் ஏற்பட்ட கடும் காயத்தாலுமே குழந்தை உயிரிழந்தது என்று தெரிய வந்தது.
குழந்தையின் தந்தை பிற இடங்களில் தங்கிநின்று கூலி வேலை செய்து வருபவர். இதனால், குழந்தை தாயாரின் பராமரிப்பிலேயே இருந்துள்ளது. இதையடுத்து, குழந்தையின் தாயை தெல்லிப்பழை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குழந்தையின் தந்தையையும் குழந்தையை பராமரிக்க வந்தவரையும் பொலிஸார் தமது கண்காணிப்பில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தாயிடம் பெற்ற வாக்குமூலத்தில் தெரியவந்ததாவது;
குழந்தை பால் குடிக்க மறுத்து அடம்பிடித்ததால் அதன் கை, கால்களை திருகினேன், என்று சித்திரவதை செய்து கொல்லப்பட்ட குழந்தையின் தாயார் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், "குழந்தை பால் குடிக்க மறுப்பதால் கைகள், கால்களை திருகினேன். ஆனால், எனது குழந்தையை நான் கொலை செய்யவில்லை" என்று கூறியுள்ளார்.
இதேவேளை, குழந்தையின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் பாரப்படுத்திய பின்னர் , நீதிமன்ற உத்தரவின் பேரில் குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)