
posted 11th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
60 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் விநியோகம்
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்ற குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கும் 'அற்றார் அழிபசி தீர்த்தல்' என்ற திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. 'பகிர்ந்துண்டு வாழ்வோம்' என்ற கருப்பொருளுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் இத்திட்டத்தின்கீழ் வேலணை, உரும்பிராய், நாவற்குழி ஆகிய பகுதிகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 60 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் சனிக்கிழமை (09) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நன்கொடையாளர் நடராஜா குகானந்தன் கலந்துகொண்டு உலருணவு பொதிகளை வழங்கி வைத்துள்ளார்.
யுத்தம், கொரோனாப் பேரிடர் போன்ற காரணங்களால் ஏற்கனவே பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள், அப்பாதிப்புகளில் இருந்து மீண்டெழுவதற்கு முன்பாகத் தற்போது நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியும் சேர்ந்துகொண்டு அவர்களை மோசமாகப் பாதித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் நன்கொடையாளர்களின் அனுசரணையுடன் கொரோனா பேரிடர் காலத்தில் ஆரம்பித்த அற்றார் அழிபசி தீர்த்தல் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)