
posted 25th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

காரைநகரில் 12 கிலோ கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் கைது!
(எஸ் தில்லைநாதன்)
காரைநகர் - ஊரி பகுதியில் 12 கிலோ 340 கிராம் எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது நேற்று (24) ஞாயிறு செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். இதன்போது ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த 44 வயதுடைய சந்நேகநபர் ஒருவரே கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற வேளை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டார். அவரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிக்குவால் காணிகள் அபகரிப்பு
(ஏ.எல்.எம்.சலீம்)
திருகோணமலை - புல்மோட்டை அரிசிமலையில் பொதுமக்களை அச்சுறுத்தி அவர்களுக்கு சொந்தமான காணிகளை பிக்கு ஒருவர் அடாத்தாகப் பிடித்து வருகிறார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்ப்பு வெளியிட்டவரை கனரக இயந்திரத்தின் மூலம் அச்சுறுத்தியதில் வாகனம் மோதி பெண் ஒருவர் காயமடைந்தார் என்று அறிய வருகின்றது.
திருகோணமலை - புல்மோட்டை - அரிசிமலை இராணுவம் மற்றும் கடற்படை ஆதரவோடு புதிய பௌத்த விகாரை அமைத்து வரும் பனாமுரே திலகவங்ச என்ற பௌத்த பிக்குவும் அவரின் சகோதரரும் தம்மை அச்சுறுத்தி காணிகளை அபகரித்து வருகின்றனர் என்று அப்பகுதியின் முஸ்லிம் மக்கள் குற்றஞ்சாட்டினர்.
கடந்த வெள்ளிக்கிழமை 6 குடும்பங்களுக்கு சொந்தமான விவசாய காணிகள் இவ்வாறு அபகரிக்கப்பட்டன என்றும் கூறப்பட்டது.
காணிகள் பிக்குவால் அபகரிக்கப்படுவது குறித்து அறிந்தவர்கள் அங்கு சென்று எதிர்ப்பில் ஈடுபட்டனர். அப்போது கனரக இயந்திரத்தை இயக்கி பிக்குவின் சகோதரர் அவர்களை அச்சுறுத்தி விரட்டினார்.
அந்தச் சமயம், வாகனம் பெண் ஒருவரை முட்டியதில் அவர் காணமடைந்தார். சம்சுதீன் சுலைகா என்ற பெண்ணெ இவ்வாறு காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
2 இலட்சம் போதை மாத்திரைகளுடன் மன்னாரில் இளைஞர் ஒருவர் கைது!
(எஸ் தில்லைநாதன்)
2 இலட்சத்து 7 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் மன்னார் - தாராபுரம் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் செய்யப்பட்டார் என்று மன்னார் ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபரைக் கைது செய்ததன் பின்னர், மன்னார் பிரிவு ஊழல் ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த பிரதான பொலிஸ் குழுவால் குறித்த மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சந்தேக நபருக்கு போதை மாத்திரைகளை கொண்டு வந்து வழங்கிய நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மன்னார் பிரிவு ஊழல் ஒழிப்பு பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
கிணற்றிலிருந்து சடலம் மீட்பு
(எஸ் தில்லைநாதன்)
தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.
ஏழாலை - மயிலங்காட்டில் உள்ள தோட்டக் கிணற்றில் இருந்தே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டது. இதில், அதே இடத்தைச் சேர்ந்த ஆறுமுகம் துரைராசா (வயது 51) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இறந்த நபர், நேற்று முன்தினம் வீட்டில் இருந்து புறப்பட்ட நிலையில் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அவரை தேடிச் சென்றபோது, நேற்று காலை தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இவர் மது போதையில் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
சடலம் யாழ். போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்த மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
பால் புரைக்கேறி குழந்தை மரணம்
(எஸ் தில்லைநாதன்)
பால் புரைக்கேறியதில் மூன்று மாத ஆண் குழந்தை நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.
வட்டுக்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணகுமார் ஹரிகரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.
சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது,
நேற்று காலை, குழந்தையின் தாய் குழந்தைக்கு பாலூட்டியுள்ளார். அப்போது, குழந்தை அசைவற்று காணப்பட்டது. இதையடுத்து பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அது ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
மரண விசாரணைகளை யாழ். போதனா மருத்துவமனையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் நடத்தினார். பால் புரையேறியே குழந்தை இறந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)