
posted 18th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பெருமளவு ஹெரோயினுடன் 70 வயதானவர் யாழில் கைது!
(எஸ் தில்லைநாதன்)
யாழ். நகர மத்தியில் ஒரு கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 70 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளி (15) மாலை 3 மணியளவில், தபால்நிலைய வீதியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் முன்பாக இவர் கைதானார்.
வாகனமொன்றில் போதைப்பொருளை பரிமாற்ற முயன்றபோது, விசேட அதிரடிப்படையினரால் அவர் கைதானார்.
வல்வெட்டித்துறையை சேர்ந்த ஒருவரே கைதானார்.
பூநகரி விபத்தில் ஒருவர் பலி!
(எஸ் தில்லைநாதன்)
பூநகரி பகுதியில் நேற்று முன்தினம் (16) சனிக்கிழமை இடம் பெற்ற விபத்தின்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து நேற்று முன்தினம் பிற்பகலில் இடம்பெற்றது. விபத்தை ஏற்படுத்திய வாகனம் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது வாகனம் மோதியதாகக் கூறப்படுகின்றது.
சம்பவத்தில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
மற்றுமொருவர் படுகாயம் அடைந்த நிலையில் அங்கு நின்றவர்களால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் தொடர்பில் பூநகரி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட இடங்களிற்கு அதிகாரிகள் கள விஜயம்
(எஸ் தில்லைநாதன்)
சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட இடங்களிற்கு அதிகாரிகளால் கள விஜயம் மேற்கொள்ளப்பட்து.
கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமான மணல் அகழ்வு இடம்பெறுமிடங்களுக்கு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்லஸ் தேவானந்தாவின் பணிப்பின் பெயரில் உயர்மட்ட அதிகாரிகள் குறித்த பகுதிகளிற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இரணைமடு குளத்தின் ஆற்றுப்படுக்கைகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவ்வாறான இடங்களை இனம் கண்டு சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கும் வகையில் காவலரண்களை அமைக்க வேண்டிய இடங்களை அடையாளப்படுத்தி உள்ளனர்.
த.தே.கூட்டமைப்பினர் இதுவரை காலமும் கூறியது பொய் என நிருபித்துள்ளோம் - சுகாஷ்
(எஸ் தில்லைநாதன்)
இலங்கை “ரோம்” பிரகடனத்தில் கையெழுத்திடாதபடியால், தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்குச் சர்வதேச விசாரணை கோரமுடியாது என்று சுமந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதுவரை காலமும் கூறியது பச்சைப் பொய் என்பதையும் நாங்கள் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) கூறியதே சத்தியம் என்பதையும் காலம் நிரூபித்துக் காட்டியுள்ளது.
இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். அவரது உத்தியோகபூர்வ சமூக ஊடகத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இனப்படுகொலை இலங்கை அரசைக் காப்பாற்றுவது யார்? தமிழினத்தைக் காட்டிக்கொடுப்பது யார்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மணல் ஏற்றிச் சென்ற இரு டிராக்டர்கள் சிக்கின
(எஸ் தில்லைநாதன்)
கிளிநொச்சியில் அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற இரு உழவு இயந்திரங்களை இராணுவத்தினர் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று அவர்கள் நடத்திய சோதனையின் போது இரண்டு உழவு இயந்திரங்கள் பிடிபட்டன.
அதேவேளை, குறித்த உழவு இயந்திரங்களின் சாரதிகளும் கைது செய்யப்பட்டு தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)