
posted 11th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

பன்குளத்தில் பிள்ளையார் சிலை
(ஏ.எல்.எம்.சலீம்)
திருகோணமலை பன்குளத்தில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இனமுறுகலை ஏற்படுத்தும் செயல் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பன்குளம் பிரதான வீதியில் திடீரென சிலரால் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டது. இது தொடர்பில் மொறவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இனமுறுகலை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சிலை வைக்கப்பட்டிருப்பதாகவும், இங்கு புத்தர் சிலையோ, பிள்ளையார் சிலையோ வைக்க வேண்டாம் என்றும் அந்தப் பகுதியினர் தெரிவித்தனர் என்று கூறப்பட்டது.
பெண்கள் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்!
(எஸ் தில்லைநாதன்)
வீட்டுக்குள் புகுந்த கும்பலொன்று வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாய் மற்றும் மகள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
நீர்வேலியில் நேற்று முன்தினம் (09) சனிக்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த தாயும், மகளும் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், தனிப்பட்ட பகை காரணமாகவே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சத்துருகொண்டான் 186 பேர் படுகொலை
(ஏ.எல்.எம்.சலீம்)
சத்துருகொண்டானில் படுகொலை செய்யப்பட்டதன் 33ஆவது ஆண்டு நினைவு தினம் பனிச்சையடி சந்தியில் உள்ள நினைவுத்தூபியில் நடைபெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேத்திரன், ஞா. சிறிநேசன், மட்டக்களப்பு மாநகர முன்னாள் பிரதி முதல்வர் க. சத்தியசீலன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த. சுரேஸ், சிவில் சமூக செயல்பாட்டார்களான அருட்தந்தை ஜெகதாஸ், அருட்தந்தை ரொசான், க.லவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
1990 செப்ரெம்பர் 09ஆம் நாள் மாலை இராணுவத்தினரும், முஸ்லிம் ஊர்காவல் படையும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது 186 பேர் இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டில் கசிப்பு வைத்திருந்தர் கைது!
(ஏ.எல்.எம்.சலீம்)
கசிப்பு வைத்திருந்த ஆணும், பெண்ணுமாக இருவர் கைது செய்யப்பட்டனர் என்று காத்தான்குடி போலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு - கிரான் குளம் பகுதியில் வீட்டில் கசிப்பை மறைத்து வைத்திருந்த நிலையில் பொலிஸார் அதனைக் கைப்பற்றினர்.
கைதான பெண்ணிடமிருந்து 24 லீற்றர் கசிப்பும், ஆணிடமிருந்து 23 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதான இருவரும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அம்பாறை மைதானத்தில் ரென்னிஸ் திடல் திறப்பு!
(ஏ.எல்.எம்.சலீம்)
அம்பாறை நகர சபை மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ரென்னிஸ் திடல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் திலக் ராஜபக்ச, அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச். ஏ. என். கே. தமயந்த விஜயசிறி, இலங்கை ரென்னிஸ் சங்கத்தின் தவிசாளர் இக்பால் பின் இஸ்ஹாக், இலங்கை இராணுவத்தின் 24வது காலாட்படை பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் விபுல சந்திரசிறி, உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
மலையக தமிழ் குடும்பங்களுக்குரிய கிராமியக் கட்டமைப்பு
(எஸ் தில்லைநாதன்)
மலையகத் தமிழ் மக்களின் வீட்டுரிமைப் பிரச்சினையை உணர்ச்சிவசமாக, அவசரப்பட்டு வாக்கு வங்கி அரசியல் நோக்கில் அணுகாமல் அறிவுபூர்வமாகப் பார்க்க வேண்டும் எனப் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச வீடமைப்பு நியமங்களுக்கு அமைவாகவும், இலங்கை அரசாங்கம் சிங்கள மக்களுக்கு வழங்கிய அடிப்படைகட்கு அமையக் குறைந்தது 20 பேர்ச் அளவான காணிகளைக் கொண்ட கிராமியக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் தள்ளப்பட்ட சூழலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் குறுகிய இடப்பரப்பில் வசதிக் குறைவான மாடி வீட்டுத் திட்டத்தை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே முன்மொழிந்து சிறு அளவில் செயற்படுத்தி மக்களிடமிருந்து கடும் விமர்சனத்தை சந்தித்தது.
இலங்கை அரசாங்கம் காணி அற்றவர்களுக்கு கடந்த காலங்களில் வெவ்வேறுபட்ட திட்டங்களின் மூலம் காணிகளை வழங்கியுள்ளது. மக்களின் வரிப்பணத்தில் அதாவது அரசாங்கச் செலவில் கணிசமான கிராமிய அமைப்புத் திட்டங்கள் அமைக்கப்பட்டன. இவை யாவும் 20 பேர்ச்சுக்கும் அதிக அளவான காணிகளைக் கொண்டதாக உள்ளன.
ஆனால், மலையக மக்கள் என வரும் போது மாத்திரம் பாரபட்சம் காட்டும் வரலாறே எங்கும் உள்ளது .
மைத்திரி ‒ ரணில் ஆட்சியில் 7 பேர்ச் அடிப்படையில் தனி வீட்டுத் திட்டம் ஓரளவாவது நிறைவேறியது. அது முழுத் திருப்தியாக இல்லாதபோதும் மக்களும், அரசாங்கமும் நிதியைப் பகிர்ந்து வீடமைப்பை ஏற்படுத்தியதால் மக்கள் அதை ஓரளவு வரவேற்றனர். அவர்கட்குப் பின்பு வந்தவர்கள் அதைவிட ஒருபடி முன்னேறிப் பரவலான சமூகக் கோரிக்கையை கருத்திற் கொண்டு 20 பேர்ச் அடிப்படையில் கிராமிய வீட்டுத் திட்டத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும். அதை விடுத்து வெறும் 10 பேர்ச் காணியை வழங்கி கைகழுவப் பார்ப்பது மோசடியானது. வரலாறு முழுவதும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் போலியான மக்கள் சார்பு வழமை இவ்வாறே இருந்தது எனப் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் குறிப்பிட்டுள்ளார்.
மலையகம் முழுவதிலும் பயிர் செய்யாத நிலங்கள் குறைந்தது 60,000 ஹெக்டேயர்கள் எனத் தெரிகிறது. 20 பேர்ச் அடிப்படையில் மாதிரிக் கிராமக் கட்டமைப்பைச் சிறப்பாக உருவாக்கும் வாய்ப்புத் தெளிவாகத் தெரிகிறது. அதை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்திப் போராடும் பணியில் முற்போக்கு ஜனநாயக, இடதுசாரிச் சக்திகள் ஏற்கனவே இறங்கியுள்ள போதும் ஒழுங்குபடுத்திய வேலைத் திட்டங்களை மேலும் முன்னெடுக்க வேண்டும். புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியும் அதன் வெகுஜன இயக்கங்களும் காணி உரிமைக்காகக் ஏற்கனவே காத்திரமாகப் பங்காற்றியுள்ளது என்றும், இனியும் செயற்படும் என்றும், அனைத்து முற்போக்கு சக்திகளோடும் ஐக்கியமாகப் போராட எப்போதும் தயாராக இருக்கிறது என்றும் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா. செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)