
posted 9th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
குறுங்கால கற்கை நெறிகள் பயனுள்ளவை பீடாதிபதி பாஸில்
நவீன இக்காலத்தில் உலக மட்டத்தில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்களுக்கு குறுங்காலக் கற்கை நெறிகள், பயிற்சிகளும் சிறப்புற வழிகோலுகின்றன.
இந்த வகையில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை, கலாச்சார பீட அரசியல் விஞ்ஞானத்துறையுடன் இணைந்து குறுங்காலக் கற்கை நெறியாக பாராளுமன்ற செயற்பாடுகளும் ஒழுங்கு முறைகளும் பற்றிய கற்கை நெறியை நடத்துவதற்கு இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பாராளுமன்றம் முன்வந்தமை எமது மாணவர்களுக்கு கிடைத்த பெரும்பேறாகும்.” இவ்வாறு, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாச்சார பீட பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் கூறினார்.
இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாச்சார பீட அரசியல் விஞ்ஞானத்துறை, இலங்கை ஜனாநாயகக் குடியரசின் பாராளுமன்றத்துடன் இணைந்து நடத்தும் குறுங்கால கற்கை நெறியின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பல்கலைக்கழக கலை, கலாச்சார பீட அரசியல் விஞ்ஞானத்துறையின் துறைத்தலைவர் கலாநிதி எம். அப்துல் ஜப்பார் தலைமையில், கலை, கலாசார பீட கேட்போர் கூடத்தில் மேற்படி அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது. பாராளுமன்ற செயற்பாடுகளும் ஒழுங்கு முறைகளும் பற்றிய இந்த குறுங்கால கற்கை நெறியில் பல்கலைக்கழக உள்வாரி இளங்கலைப்பட்டதாரி மாணவர்கள் 250 இற்கு மேற்பட்டோர் பங்கு கொள்வதுடன், அங்குரார்ப்பண நிகழ்விலும் கலந்து கொண்டனர்.
பீடாதிபதி பேராசிரியர் பாஸில் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஒரு நாட்டின் பாராளுமன்றம் என்பது மக்களுடன் இணைந்த முக்கியத்துவமிக்க உயர் சபையாகும்.
எனவே, ஆட்சியியலில், ஆட்சி பற்றிய, பாராளுமன்ற ஜனநாயகம் பற்றிய நம்பிக்கை மக்களிடத்தில் வளர்க்கப்படவேண்டும். அங்கு ஜனநாயகம் நிலை கொள்கிறதா என்ற தெளிவையும் மக்கள் பெற வேண்டும்.
இந்த வகையில் பாராளுமன்றத்தை சமூகத்தோடு இணைப்பதற்கான பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஓர் அங்கமாகவே பல்கலைக்கழக மாணவர்களுக்கான இத்தகைய குறுங்காலக்கற்கை நெறிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் முதலில் கொழும்பிலும், அடுத்து யாழ்ப்பாணத்திலும் நடத்தப்பட்ட பாராளுமன்றம் பற்றிய இந்த கற்கை நெறியை நடத்தவென மூன்றாவதாக தென்கிழக்கு பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டமை வரவேற்கத்தக்கதாகும்” எனக் கூறினார்.
துறைத்தலைவர் கலாநிதி எம். அப்துல் ஜப்பார் உரையாற்றுகையில்,
“எமது கலை, கலாச்சார பீடத்தின் அரசியல், விஞ்ஞானத்துறை உருவாக்கப்பட்ட காலம் முதல், சிறந்த பயிற்சிப் பட்டறைகளையும், கருத்தரங்குகளையும், செயற்திட்டங்களையும் மாணவர் நலன் கருதி வெற்றிகரமாக செயற்படுத்தி வரும் நிலையில், மிகப் பெரும் பயன்தரும் இன்றைய குறுங்கால கற்கை நெறி அமைந்துள்ளது. தேசிய மட்டத்தில் எமது துறையை முன்னேற்றகரமாகக் கொண்டு செல்வதற்கு முனைப்பான செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்போம்” என்றார்.
நிகழ்வில், பாராளுமன்ற மக்கள் தொடர்பு அதிகாரி ஜெஸ்ரி முஹம்மட் கற்கை நெறி தொடர்பான நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் விளக்கமளித்ததுடன், பாராளுமன்ற நிருவாகப்பணிப்பாளர் ஜி. தட்சனா ராணி, பீடாதிபதி எம்.எம். பாஸில், துறைத் தலைவர் கலாநிதி. எம். அப்துல் ஜப்பார், மக்கள் தொடர்பு அதிகாரி, யெஸ்ரி முஹம்மட் பாராளுமன்ற நூலகர் எஸ்.எல். சியாத் அஹமட், ஊடக அதிகாரி நுஸ்கி முக்தார் ஆகியோர் முக்கிய தலைப்புக்களில் விளக்க விரிவுரைகளும் ஆற்றினர்.
அரசியல் விஞ்ஞானத்துறை விரிவுரையரள் ரி.எப். சாஜீதா நன்றியுரை பகர்ந்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)