
posted 15th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
காலத்தைக் கடத்துகிறார் ரணில்
உள்நாட்டிலேயே பல இருக்கும்போது இத்தனை பிரச்னைகளுக்கும் ஒரு நிரந்தரமான தீர்வை காண வேண்டிய ஜனாதிபதி தற்போது நாட்டை விட்டு பல நாடுகளுக்கும் செல்வது மாத்திரமல்லாமல் எந்த பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் ஒரு ஆணைக்குழு அமைப்பதாக காட்டி காலத்தைக் கடத்துகின்றார் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
எதிர்வரும் 21ஆம், 22 ஆம் திகதிகளில் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புச் சம்பந்தமாக விவாதம் வர இருக்கின்றது. இவ்வாறான பிரச்சினைகள் அனைத்தும் இந்த நாட்டில் இருக்கும்போது அதை விடுத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலகம் சுற்றும் வாலிபனாக ஒவ்வொரு நாடாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றார்.
உள்நாட்டில் இத்தனை பிரச்சினைகள் இருக்கும்போது இத்தனை பிரச்சினைகளுக்கும் ஒரு நிரந்தரமான தீர்வை காணவேண்டிய ஜனாதிபதி, தற்போது நாட்டை விட்டு பல நாடுகளுக்கும் செல்வது மாத்திரமல்லாமல் எந்த பிரச்சினையை எடுத்துக்கொண்டாலும் ஆணைக்குழுக்களை அமைத்து காலத்தைக் கடத்துகின்றார்.
தற்போதைய உயிர்த்த ஞாயிறு பிரச்சினை தொடர்பாக மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து இது விடயமாக விசாரித்து அந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக இருக்கின்றார். ஆனால் பாராளுமன்றத்தில் இன்று இருக்கும் பொதுஜன பெரமுன கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளுமே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று கூறி நிற்கும்போது ஜனாதிபதி மாத்திரம் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து சனல் 4 வெளியிட்ட வீடியோவை விசாரித்து ஒரு அறிக்கையை தயாரிப்பது என்பது இந்த நாட்டு மக்களை மாத்திரம் அல்ல சர்வதேசத்தையும் ஏமாற்றும் செயல் என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)