
posted 8th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கல்விக் கொள்கைகளை அரசியலுக்காக பயன்படுத்த இடமளியோம்
நாட்டின் கல்விக் கொள்கைகளை அரசியலுக்கு அடிபணியவோ அமைச்சர்களின் தேவைக்கேற்ப மாற்றவோ இடமளிக்காது. அதனை ஒரே சட்டக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
பொருளாதார சரிவுக்கு பின்னர் இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் இந்நேரத்தில் நாட்டின் துரித அபிவிருத்திக்கான புதிய கல்வி முறையொன்று நாட்டுக்கு அவசியம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
எப்பாவல சித்தார்த்த மத்திய கல்லூரியின் 150ஆவது ஆண்டு பூர்த்தி விழா நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இலங்கையின் கல்வி முறையானது உலகிற்கு ஒரு பல்கலைக்கழகமாக அமையும் வகையில் வடிவமைக்க எதிர்பார்த்திருப்பதாகவும், விரைவான கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் மேற்படி வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதியின் தலைவமையில் கல்லூரியின் 150ஆவது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு முத்திரையொன்றும் வெளியிடப்பட்டது.
எப்பாலை ஸ்ரீ சித்தார்த்த கல்லூரிக்கு ஜனாதிபதியொருவரின் முதலாவது வருகையை நினைவுகூறும் வகையில் விருந்தினர் பதிவேட்டில் ஜனாதிபதி பதிவிட்டார்.
2021 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நினைவுப் பரிசுகள் வழங்கிவைக்கப்பட்டதோடு, ஆசிரியர்கள் குழாமுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
பாடசாலை மாணவர் ஒருவரின் ஆக்கம் ஒன்றும் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமாக வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க;
"நாட்டில் புதிய கல்வி முறைக்கான அவசியம் தோன்றியுள்ளது. அதற்கமைய அடுத்துவரும் 20 - 30 ஆண்டுகளுக்கு பொருத்தமான வகையில் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். புதிய தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட விடயங்கள் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
மேலும், 1989 இல், தொழில் வாய்ப்புக்களை இலக்கு வைத்து "அசோசியேட்" பட்டம் (Associate degree) வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பு அக்காலத்தில் இருக்கவில்லை. அதனை தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்த முடியும் என எதிர்பார்க்கிறேன்.
இலங்கை உலகிற்கு ஒரு பல்கலைக்கழகமாக இருக்க வேண்டும். கல்விக் கொள்கையை அரசியலுக்கு அடிபணிய இடமளிக்ககூடாது. மேலும், அமைச்சர்களின் தேவைக்கேற்ப மாற்றவும் இடமளிக்க கூடாது. கல்விக் கொள்கையை சட்டமாக்கி அதனை சீரான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
வடமத்திய மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் சித்தார்த்த மத்திய கல்லூரியின் பழைய மாணவருமான சட்டத்தரணி கஸ்தூரி அனுராதநாயக்கவும் இந்நிகழ்வில் உரையாற்றினார்.
இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, வடமத்திய மாகாண ஆளுநர் மஹீபால ஹேரத், கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, ஸ்ரீ சித்தார்த்த மத்திய கல்லூரி அதிபர் ஜனக ஹேரத் உள்ளிட்டவர்களோடு மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)