
posted 13th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

எட்டு வருட மக்கள் சேவையில் நிந்தவூர் மத்தியஸ்த சபை!
(ஏ.எல்.எம்.சலீம் - மத்தியஸ்த சபை உறுப்பினர்)
நாடெங்கும் பிரதேச செயலக ரீதியாக மத்தியஸ்த சபைகள் வெற்றிகரமாக இயங்கிவருகின்றன. 1988 - 72ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் சட்டத்தின் கீழ், நீதி அமைச்சின் கீழான மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவானது பிரதேச செயலக ரீதியாக மத்தியஸ்த சபைகளை ஸ்தாபித்து அவை மக்களுக்குப் பெரும் சேவையாற்றி வருகின்றன.
தற்சமயம் நாடளாவிய ரீதியில் 329 மத்தியஸ்த சபைகள் ஸ்தாபிக்கப்பட்டு மக்களுக்கு சேவையாற்றிவருவதுடன், நீதிமன்றம், பொலிஸ், நிதி நிறுவனங்களிடமிருந்தும், பொது மக்களிடமிருந்தும் நேரடியாகவும் இந்த சபைகளில் பிணக்குகள் ஆற்றுப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி மத்டதியஸ்த்தர்கள் சபை குழாமொன்றின் மூலம் ஏற்படுகின்ற மத்தியஸ்தம் என்பது பிணக்கொன்று ஏற்பட்ட இரு தரப்பினர்களை கலந்துரையாடும் ஒரு செயற்பாட்டினூடாக அவ்விரு தரப்பினர்களும் திருப்தியடையக் கூடிய இணக்கமொன்றுக்கு வழிகாட்டும் செயற்பாடாகும்.
மூன்று வருட சேவைக் காலத்தை கொண்ட மத்தியஸ்த சபைகள் நாட்டில் வெற்றிகரமாக செயற்பட்டு மக்கள் அபிமானத்தையும் வென்று திருப்திகரமான சேவைகளை ஆற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த வகையில் அம்பறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேச சபை; பிரிவில் இயங்கிவரும் நான்காவது மத்தியஸ்த சபை தமது எட்டு வருட பதவிக் காலத்தை சிறப்புடன் நிறைவு செய்துள்ளது.
இந்த சபை நாட்டின் பல்வேறு நெருக்கடி நிலமைகள் காரணமாகவும், பதவிக்காலம் முடிவுற்றும் தொடர்ச்சியான சேவையை முன்னெடுத்து வருவதுடன் 15.09.2023 எட்டு வருடங்களையும் நிறைவு செய்துள்ளது.
ஓய்வு பெற்ற கணித ஆசிரியையான பல்கீஸ் அப்துல் மஜீத்தை தவிசாளராகவும், ஓய்வுநிலை அதிபர் யூ.எல்.ஏ. முபாரக்கை உப தவிசாளராகவும் கொண்டு 27 மத்தியஸ்த குழு உறுப்பினர்களுடன் 15.09.2015 அன்று இந்த நான்காவது மத்தியஸ்த சபை ஸ்தாபிக்கப்பட்டு இயங்கத் தொடங்கியது.
இதனையடுத்து சுமார் 8 மாதங்களின் பின்னர் மேலும் 4 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு 31 பேர் கொண்ட மத்தியஸ்த குழு உறுப்பினர்களுடன் சேவை தொடர்ந்தது. எனினும் தற்சமயம் 27 குழாம் உறுப்பினர்களுடன் சேவை தொடர்ந்து வருகின்றது.
இதில் மத்தியஸ்த்தர்களாக 22ஆண்களும், 05 பெண்களும் அடங்குகின்றனர்.
ஆரம்பத்தில் தவிசாளர் பல்கீஸ் அப்துல் மஜீத் தானொரு பெண்ணாகவிருப்பதால் சபைக்கு தலைமை தாங்கிவிருப்பது குறித்து சற்றுத் தயக்கமும், சலனமும் கொண்டிருந்த போதிலும், உப தவிசாளர் யூ.எல்.ஏ. முபாரக் மற்றும் சக உறுப்பினர்கள் கொடுத்த ஒன்றுபட்ட ஆதரவும் ஊக்கமும் அவரது சிறந்த தலைமைத்துவ செயற்பாட்டுத் திறனை கடந்த எட்டு வருட காலமும் மிளிரச் செய்து மக்களின் பாராட்டையும் பெறச் செய்துள்ளது.
அவருடைய தலைமைத்துவ ஆளுமை, நிருவாகத்திறன் காரணமாக மிகுந்த ஒற்றுமையுடனும், கூட்டுப் பொறுப்புடனும் சகல மத்தியஸ்த்தர்களும் திகழ்ந்து வெற்றிகரமான மக்கள் சேவையை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
பெண்களாலும் இத்தகைய பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்து சாதிக்க முடியுமென்ற முன்னுதாரணமிக்கவராக தவிசாளர் பல்கீஸ் திகழ்ந்து நிரூபித்துள்ளார்.
மேலும், இச்சபையின் சிறந்த செயற்பாட்டுக்கு வினைத்திறனான சேவைக்கும் அடிக்கடி ஆலோசனைகளையும் ஊக்குவிப்பையும் வழங்கிவரும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் மத்தியஸ்த பயிற்றுநர் எம்.ஐ.எம். ஆஸாத்தையும் இங்கு குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளோம்.
அதேவேளை சபைக்கென நியமனம் செய்யப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. பாத்திமா சாமிலாவின் ஒத்துழைப்பும் உந்து சக்தியாக அமைந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
31.12.2019 வரை 125 எஞ்சியிருந்த பிணக்குகளைப் பெற்றுக் கொண்ட இச் சபைக்கு 2020 முதல் 2023 செப்டம்பர் 15 வரை 657 பிணக்குகள் கிடைத்தன. இதில் பிணக்காளிகளின் 153 நேரடி பிணக்குகளும், வங்கிகளின் 182, பொலிஸ் நிலையங்கள் மூலம் 100, நீதிமன்றத்திலிருந்து 69, மீறுகை 28 என ஆற்றுப்படுத்தப்பட்டிருந்தன.
இக்காலப்பகுதியில் 209 பிணக்குகள் இணக்கம் காணப்பட்டுள்ளதுடன், 294 பிணக்குகள் இணக்கம் காணப்படாதைவையாகவும், 20 பிணக்குகள் வாபஸ் பெறப்பட்டுமுள்ளன.
இச்சபையின் தவிசாளராக ஒரு பெண் இருந்து வந்தது மட்டுமன்றி மேலும் 5 பெண் உறுப்பினர்களும் இந்த மத்தியஸ்த குழுவில் அங்கம் வகித்தமையும் இந்து ஆலயத்தலைவர் ஒருவரும் உட்பட்டிருந்தமையும் சிறப்பம்சமாகும்.
மேலும் தவிசாளர் பல்கீஸ் அப்துல் மஜீத் இக்காலத்தில் எடுத்துக்கொண்ட முயற்சிகள் காரணமாக சபை எதிர்நோக்கிய பௌதிகவள பிரச்சினைகளுக்குத் தீர்வுகளும் எட்டப்பட்டன.
இவ்வாறெல்லாம் சிறப்புடன் முன்னெடுக்கப்பட்டு அரும்பெரும் சேவையாற்றும் நிந்தவூர் மத்தியஸ்த சபைக்கென நிரந்தரக் கட்டிடமொன்று இல்லாமையும் மிக முக்கிய பிரச்சினையாக நீடித்து வருகின்றது.
எதிர்காலத்திலாவது இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட சம்பந்தப்பட்டோர் ஆவன செய்ய வேண்டும் என்பதை இந்த எட்டு வருடகால நிறைவிலும் வலியுறுத்துவோம்.
மேலும், சபை அமர்வுகளின்போது செயலாளராக இயங்கும் ஏ.எம்.எம். மன்சூரின் பணிகளைப் பாராட்டுவதுடன் நற்சேவை புரிந்து எட்டு வருட நிறைவு கண்ட நிந்தவூர் மத்தியஸ்த சபை தவிசாளர், உப தவிசாளர் மற்றும் மத்தியஸ்த குழு உறுப்பினர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்றால் மிகையாகாது.
மத்தியஸ்தம் பிணக்கிற்கும் தீர்வு மனதுக்கும் நிம்மதி!
எமது பிணக்குகளை நாமே தீர்த்துக் கொள்வோம்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)