
posted 23rd September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
இலக்கிய ஆளுமை மறைவு
மட்டக்களப்பபின் மூத்த இலக்கிய ஆளுமை கலாபூசணம் கவிஞர் ஆ. மு. சி. வேலழகனின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
இவ்வாறு மகுடம் கலை இலக்கிய அமைப்பின் சார்பில் இலக்கியவியலாளர் மைக்கல் கொலின் இன்று 2023. 09. 23 காலமான கவிஞர் ஆ.மு.சி. வேலழகனின் மறைவையொட்டி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் அந்த இரங்கல் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
1972 முதல் கவிதை, சிறுகதை, நாவல், ஆய்வு என இலக்கியத்தின் பல தளங்களிலும் இயங்கி வந்த இவரது 22ற்கு மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன.
சில்லிக்கொடி ஆற்றங்கரை, சட்டக்கிணறு என்பவை இவரது முக்கியமான மட்டக்களப்பின் மண்வாசனை வீசும் நாவல்களாகும். இவரது மூங்கில் காடு சிறுகதைத் தொகுப்பு மூன்று பதிப்புகள் கண்டதும் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்குட்படுத்திய தொகுப்புமாகும்.
இலங்கை சாகித்திய விருது உட்பட பல இலக்கிய விருதுகளை தனது படைப்புகளுக்காக பெற்றுள்ள இவர் மட்டக்களப்பு தமிழ்ச்சங்க மேடையில் ஒரே நேரத்தில் தனது ஐந்து நூல்களை வெளியிட்டவர் என்பதும் தமிழ்ச்சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. .
ஆ. மு. சி. வேலழகன் அவர்களது பல நூல்கள் தமிழ்நாட்டில் இளவழகன் பதிப்பகம், The parkar பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது.
குறித்த பதிப்பங்களை தமிழ்நாட்டில் வசித்த கவிஞரின் மகன் இளவழகனின் சொந்த பதிப்பகம் என்பதும், இளவழகன் பதிப்பகம் மூலம் ஈழத்தவரின் பல நூல்கள் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.
எண்பது வயதை கடந்தும் இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கி வந்த ஐயா ஆ.மு.சி. வேலழகனுக்கு மகுட அஞ்சலிகள் என்று தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)