
posted 8th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை அதிகளவு மாணவிகள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு
இம்முறை இடம்பெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை மாணவிகள் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பல்கலைக்கழகம் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்.
2022ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் கடந்த 04ஆம் திகதி வெளியான நிலையில் வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகள் மாவட்ட ரீதியில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் ஆறாவது இடத்தையும், வணிகப் பிரிவில் ஐந்து மற்றும் ஆறாவது இடத்தையும் கணிதப்பிரிவில் பத்தாவது இடத்தையும், கலைப்பிரிவில் நான்காவது ஐந்தாவது மற்றும் ஒன்பதாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
இதனடிப்படையில் இப்பாடசாலையிலிருந்து மருத்துவத் துறைக்கு 9 மாணவிகளும், பொறியியல் துறைக்கு 9 மாணவிகளும், வர்த்தகத் துறையில் 13 மாணவிகளும், கலைத்துறையில் சட்டத்துறைக்கு 4 மாணவிகள் உட்பட 18 மாணவிகளும் பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர். இதுதவிர ஏனைய துறைகளுக்காக 52 மாணவிகள் பல்கலைக்கழகம் செல்ல தெரிவாகி சாதனை படைத்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களில் இப்பாடசாலையின் க.பொ.த. உயர்தரப் பெறுபேறுகளில் ஏற்பட்ட வீழ்ச்சியினை சீர் செய்யும் நோக்கில் பாடசாலை அதிபர் திருமதி. ரீ. உதயகுமாரின் வழிகாட்டலில் பாடசாலை சமுகம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு மற்றும் பழைய மாணவர் சங்கம் என்பன எடுத்துக் கொண்ட விசேட வேலைத்திட்டம் காரணமாகவே இந்த பெறுபேறுகள் பெற்றப்பட்டதாக உதவி அதிபர் எம். பாலகிருஷ்னன் வின்சன்ட் பாடசாலையில் இடம்பெற்ற பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)