
posted 14th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
7ஆம் நாள் அகழ்வு - எலும்புக்கூடுகள் மீட்பு

கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழியின் ஏழாவதுநாள் அகழ்வாய்வுகள் நேற்றுமுன்தினம் (12) இடம்பெற்ற நிலையில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் சயனைட் குப்பி ஒன்றும், இரண்டு இலக்கத் தகடுகளும் தடயப் பொருட்களாக எடுக்கப்பட்டன.
இந்நிலையில் ஏழுநாட்கள் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை 9மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.
இந் நிலையில் ஏழாம் நாள் அகழ்வாய்வு நேற்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கே. வாசுதேவா, சட்டத்தரணி கே.எஸ். நிரஞ்சன், ரணித்தா ஞானராசா, கிராம சேவையாளர், தடயவியல் பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த ஏழாம்நாள் அகழ்வாய்வுகள் தொடர்பில் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா கருத்துத் தெரிவிக்கையில்;
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஏழாம்நாள் அகழ்வாய்வில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், சைனட் குப்பி ஒன்றும், இரண்டு இலக்கத் தகடுகளும் தடயப் பொருட்களாக எடுக்கப்பட்டன.
இந்த புதைகுழியிலுள்ள எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மிக நெருக்கமாக, ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்து காணப்படுவதால், அகழ்வாய்வு செய்வதற்கு அதிக நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது. அகழ்வாய்வுகள் மேற்கொள்ளும் போது, சில நாட்களில் ஓரிரு எலும்புக்கூட்டுத் தொகுதிகளையே அகழ்ந்தெடுக்க முடிகின்றது.
ஏற்கனவே அகழப்பட்டுள்ள குழியிலிருந்து மனித எச்சங்களையும், தடயப்பொருட்களையும் முழுமையாக அகழ்வாய்வு செய்து எடுப்பதற்கு ஒரு சில வாரங்கள் நீடிக்கலாம் என நினைக்கின்றேன் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)