
posted 15th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

யாழ் பல்கலையில் அனுஸ்டிப்பு
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் அவர் கல்வி கற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் இன்று (15) வெள்ளி மதியம் 12:30 மணியளவில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பேரெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தி தொடர்ச்சியாக தியாக தீபத்தின் தியாக வரலாற்று பேருரை முன்னெடுக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தி மாணவர்களால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அதேவேளை நினைவேந்தலை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் சிவப்பு, மஞ்சள், கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் ஆரம்பமானது
தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவுதினம் தமிழர் தேசம் எங்கும் இன்று (15) வெள்ளிஆரம்பமானது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளரான லெப். கேணல் திலீபன் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 1987 செப்ரெம்பர் 15ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.
நல்லூர் ஆலயத்தின் வடக்கு வீதியில் உணவையும் நீரையும் ஒறுத்து 12 நாட்கள் இருந்த திலீபன், செப்ரெம்பர் 26ஆம் திகதி உயிர்நீத்தார். அவரின் 36ஆவது ஆண்டு நினைவுதினம் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நாளான நேற்று தமிழர் தேசம், புலம்பெயர் தேசம் எங்கும் ஆரம்பமானது.
பிரதான நிகழ்வு நல்லூரில் அமைந்துள்ள அவரின் நினைவிடத்தில் ஆரம்பமானது. முன்னாள் போராளியும் இரு மாவீரர்களின் சகோதருமான விடுதலை பொதுச் சுடர் ஏற்றியமையைத் தொடர்ந்து, தியாக தீபம் திலீபனின் உருவப் படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
சமநேரத்தில் நல்லூரில் உண்ணாவிரதம் ஆரம்பமான வடக்கு வீதியிலும் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது.
இதேபோன்று, யாழ். பல்கலைக்கழகம் உள்ளிட்ட வடக்கு, கிழக்கிலும் நினைவேந்தல்கள் கடைப்பிடிக்கப்பட்டன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)