
posted 22nd September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
தமிழ்த்தேசம் மீதான தாக்குதல்....! அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம்
பொத்துவிலிருந்து நல்லூர் வரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் ஊர்திப்பவனி திருக்கோணமலை கப்பல் துறையில் வைத்து சிங்களக்காடையர்களினால் தாக்கி சிதைக்கப்பட்டுள்ளது. அப் பவனியில் வந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் தாக்கப்பட்டுள்ளார். பொலிசார் முன்னிலையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சிங்களப் பெண்களும் இத்தாக்குதலில் பங்கு பற்றியிருக்கின்றனர். தமிழ் ஊடகவியளாளர்களும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த தாக்குதலுக்குப் பலத்த கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். சிறீதரன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சார்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் உடனடியாகவே கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் யாழ்நகர மேஜர் மணிவண்ணன் போன்றோரும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். தமிழ் நாட்டிலிருந்து பாராளுமன்ற உறுப்பினரும் “விடுதலைச் சிறுத்தைகள்” கட்சியின் தலைவருமான திருமாவளவன் “நாம் தமிழர்” கட்சியின் தலைவர் சீமான் ஆகியோரும் பலத்த கண்டனத்தை தெரிவித்துள்ளனர். லண்டனிலும், கனடாவிலும் இதனைக் கண்டித்து போராட்டங்களும் இடம்பெற்றுள்ளன. கனடாவில் இலங்கைத் தூதுவராலயத்திற்கு முன்னால் போராட்டம் இடம் பெற்றுள்ளது.
நினைவுகூரல் என்பது மக்களின் அடிப்படை உரிமை. அதைத் தடுப்பதற்கு எவருக்கும் எந்தவித உரிமையும் கிடையாது. பொலிசார் தகுந்த பாதுகாப்பைக் கொடுத்திருக்க வேண்டும். பெருந்தேசிய வாதம் இந்த விழுமியங்களை பின்பற்றுவதற்கு சிறிதளவாவது இடத்தைக் கொடுக்கவில்லை. இங்கு அவமானப்படுத்தப்பட்டது திலீபனோ, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனோ அல்ல. மாறாக தமிழ்த் தேசியம் தான் அவமானப்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் தமிழர் தாயகத்தின் தலைநகரில் இந்த அவலம் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் நடாத்தியவர்கள் திருகோணமலை மாவட்டத்தின் பூர்வீகக்குடிகளல்லா. பலவந்தமாக தமிழ்த்தாயகத்தின் கூட்டிருப்பைச் சிதைப்பதற்காக குடியேற்றப்பட்டவர்கள். அரசு தாக்குதலுக்கான துணிவைக் கொடுத்திருக்கின்றது. உண்மையில் நினைவுகூரல் என்பது புதிய தலைமுறைக்கு வரலாற்றை கடத்துகின்றது. தமிழ் மக்களுக்குத் தொடர்ச்சியான விழிப்பூட்டலைச் செய்கின்றது. அதன்வழி தமிழ்த் தேசியத்தின் இருப்பைப் பாதுகாக்கின்றது. இந்த உண்மைகள் தான் தாக்குதலுக்கு காரணமாக இருந்திருக்கின்றன.
இனப்பிரச்சினை என்பதே தமிழ் மக்கள் தேசமாக இருப்பது அழிக்கப்படுவதுதான். இதனால் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இனஅழிப்பைச் செய்து கொண்டே இருக்கும். இது ஒரு கலாச்சார அழிப்பு. இது அரசின் செயல் திட்டத்தில் ஒன்றாகும். எனவே அரசின் ஆதரவு இல்லாமல் அதன் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த தாக்குதல் நடந்திருக்குமென கூற முடியாது.
உண்மையில் இந்தத் தாக்குதலுக்கான எதிர்வினைகள் போதுமானது எனக் கூறமுடியாது. தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு அறிக்கையுடன் மட்டும் தமது கடமைகளை முடித்துக் கொண்டார்கள். பாராளுமன்றத்திலும் இதனை பேசுபொருளாக்கவில்லை. பாராளுமன்றத்தில் இதனைப் பேசுபொருளாக்கியவர்கள் மலையக பாராளுமன்ற உறுப்பினர்களான இராதாகிருஸ்ணனும், வேலுகுமாரும் தான். மனோகணேசனின் அறிக்கை இறுக்கமானது என கூற முடியாது. தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை மையமாக வைத்து பாராளுமன்றத்தை போர்க்களமாக்கியிருக்க வேண்டும்.
இங்கே இரண்டு விவகாரங்கள் இருக்கின்றன. ஒன்று தமிழ் மக்களின் அடிப்படை உரிமையான நினைவுகூரல் உரிமை இங்கு மீறப்பட்டுள்ளது. இவ் உரிமை சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட உரிமை. ஐக்கிய நாடுகள் சபை கூட இதனை அங்கீகரித்திருக்கின்றது.
இரண்டாவது ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை இங்கு மீறப்பட்டுள்ளது. தனது மக்கள் தொடர்பாக செயற்பாடுகளை முன்னெடுக்கும் உரிமை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உண்டு. அவ்வாறு முன்னெடுக்கின்றபோது பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கடமை பொலீசாருக்கு உண்டு.
எனவே இந்த இரண்டு விவகாரங்களையும் அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்றத்தை போர்க்களமாக்கியிருக்கலாம். கட்சி அரசியல், தேர்தல் அரசியல் காரணமாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தவித அக்கறையையும் காட்டவில்லை. இவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தால் மலையக, முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல எதிர்க்கட்சியிலுள்ள சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கியிருப்பர். பாராளுமன்றம் தவிர்ந்த தமிழர் தாயகத்திலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். தியாக தீபம் திலீபனின் ஊர்திப் பவனியை வடக்கில் இன்னமும் சிறப்பானதாகச் செய்திருக்கலாம். திருகோணமலை விவகாரத்தால் மக்கள் மிகவும் கோபப்பட்ட நிலையில் இருக்கின்றனர். அவர்களும் திரளாக பங்குபற்றியிருப்பர். இது நடைபெற்றிருந்தால் அடையாள ஊர்திப்பவனி பேரெழுச்சிப்பவனியாக வெளிப்பட்டிருக்கும். வடக்கிலுள்ள நீதிமன்றங்களும் சாதகமான நிலைப்பாட்டை எடுத்திருப்பதால் பாதுகாப்பு பிரச்சினையும் பெரிதாக வந்திருக்காது.
உண்மையில் இதற்கு தடையாக இருந்தமை கட்சி அரசியல் தான். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தாம் முன்னெடுக்காமல் பொதுக்கட்டமைப்பு மூலம் முன்னெடுத்திருந்தால் அனைத்து தேசிய கட்சிகளும் இதில் பங்கேற்புச் செய்திருக்கும். சிவில் அமைப்புக்களும் பங்கேற்றிருக்கும். தனித்து ஒரு கட்சி முன்னெடுத்ததால் ஏனைய கட்சிகள் மட்டுமல்ல சிவில் அமைப்புக்களும் கூட பங்கேற்கவில்லை. தேர்தல் நலன், கட்சி நலன் காரணமாக அரசியல் கட்சிகள் பங்கேற்க மாட்டா. கட்சிச்சீல் தங்களுக்கும் குத்தப்படும் என்பதால் சிவில் அமைப்புக்களும் பங்கேற்கமாட்டா. தமிழ்த்தேசியத்தில் அக்கறை உள்ள தனிநபர்களும் பங்கேற்க மாட்டார்கள்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் பொது அமைப்பு முன்னெடுத்தது. மக்களும் திரளாக கலந்து கொண்டார்கள். பொத்துவில் முதல் பொலிகண்டி வரை போராட்டத்தின் வெற்றிக்கும் இதுவே காரணமாகும். தமிழ் மரபுரிமை பேரவையின் முல்லைத்தீவு ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் வெற்றியடைவதற்கும் இதுவே காரணம். “எழுக தமிழ்” போராட்டங்கள் கட்சிகளும் பொது அமைப்புக்களும் இணைந்து முன்னெடுத்ததால் அவையும் வெற்றிகளைத் தந்திருக்கின்றன. குறைந்த பட்சம் இந்தப்பவனி தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்தத் தாக்குதலின் பின்னராவது ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளுடனும் பொது அமைப்புக்களுடனும் ஒரு உரையாடலை நடாத்தியிருக்கலாம். அவர்கள் அதற்கு முன்வரவில்லை. கட்சிகளுடன் பேசுவதற்கு கொள்கை முரண்பாடுகள் இருக்கலாம். 13வது திருத்தத்தை ஆதரிப்பவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இல்லை என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆனால், பொது அமைப்புக்களுடன் பேசுவதற்கு அவர்கள் என்ன கொள்கை முரண்பாடுகள் இருக்கின்றது என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.
தமிழ்த்தேசிய கட்சிகளுடன் பேசுவதற்கு கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் நினைவேந்தலை தேசமாக திரண்டு அனுஸ்டிக்க வேண்டியது அவசியமானது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஏனைய கட்சிகளுடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் பங்குபற்றியிருந்தது. தமிழ் மக்களின் அரசியல் இலக்கு தொடர்பான விவகாரங்களில் முரண்பட்டு நின்றாலும் ஏனைய பொது விவகாரங்களிலாவது ஒருங்கிணைவு அவசியம் .
தமிழ்த்தாயகத்தில் பொது ஆர்ப்பாட்டங்களையோ, பணிப்புறக்கணிப்பு போன்ற போராட்டங்களையும் நடாத்தியிருக்கலாம். தாயகத்தில் போராட்டம் இடம் பெற்றிருந்தால் தமிழ்நாட்டிலும் , புலம்பெயர் நாடுகளிலும் போராட்டங்கள் எழுச்சியடைந்திருக்கும். இவ்வாறு நடந்திருந்தால் சர்வதேச மட்டத்தில் விவகாரத்தை பேசுபொருளாக்கியிருக்கலாம்.
இந்த ஊர்திப்பவனி தொடர்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மீதும் பலத்த விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் கட்சிக் காழ்ப்புனர்வுகளும் இருக்கலாம். ஆனாலும் இந்த விவகாரங்களை கொள்கை நிலையில் நின்று அணுகுவதே ஆரோக்கியமானது. இங்கு தாக்குதல் விவகாரத்தையும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்குபடுத்தல் விவகாரங்களையும் வெவ்வேறு தளங்களில் தனித்தனியாகப் பார்க்க வேண்டும். தாக்குதல் என்பது தமிழ் மக்களின் புறப்பிரச்சினை. முன்னணி விவகாரம் என்பது தமிழ் மக்களின் அகப் பிரச்சினை. தாக்குதலைப் பொறுத்தவரை அது தமிழ்த் தேசத்திற்கு விழுந்த அடி. அது தமிழ் மக்களுக்கு பொதுவான பிரச்சினை. இதனை எந்தவித வேறுபாடும் இல்லாமல் கண்டிக்க வேண்டும். ஒழுங்குபடுத்தல் தொடர்பாக முன்னணி மீது விமர்சனங்களை வைக்கலாம் ஆனால், அது எந்த வகையிலும் தாக்குதலுக்கு எதிரான அலையை பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது.
முன்னணியைப் பொறுத்தவரை புலிகளின் தொடர்ச்சியான அரசியலையே பின்பற்ற முனைகின்றது. இது புலிகள் இயக்கம் விட்ட தவறுகளை முன்னணியும் விட காரணமாகிறது. சிறீலங்கா அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான முரண்பாட்டில் புலிகளின் பாத்திரம் முற்போக்கானதாக இருந்தது. ஆனால் தமிழ் மக்களுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையிலான உறவுகளில் பல விமர்சனங்கள் இருந்தன. ஒருங்கிணைவு அரசியலில் அவர்கள் அக்கறை செலுத்தவில்லை. தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் தேசத்தின் அனைத்து பிரிவுகளையும் இணைத்த ஐக்கிய முன்னணி மூலமே சாத்தியப்படும் என்பதை அவர்கள் சிறிது கூட கவனத்தில் எடுக்கவில்லை. பிற்காலத்தில் சில முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அது போதுமானதாக இருக்கவில்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியமை ஒரு முற்போக்கான முயற்சி தான். அது இன்னமும் விரிவடைந்திருக்க வேண்டும். ஒருங்கிணைவு அரசியல் இல்லாததினால் தேசப் போராட்டத்திற்கு வெளியே பலர் தள்ளப்பட்டனர். சிறீலங்கா அரசு அதனைப்பயன்படுத்தியது என்பதற்கு சான்றுகள் நிறையவே உள்ளன.
இதே தவறுகள் முன்னணியிலும் பலமாக இருக்கின்றன. சிறிலங்கா அரசிற்கும், தமிழ் மக்களுக்கும் இடையிலான முரண்பாட்டில் முன்னணியின் பாத்திரம் முற்போக்கானது. குறிப்பாக கஜேந்திரகுமாரின் மூன்று இயல்புகள் மிகவும் கவனிக்க வேண்டியவை. ஒன்று கொள்கையில் உறுதிப்பாடு. என்ன நெருக்கடிகள் வந்தாலும் கொள்கையில் விட்டுக்கொடுப்பை மேற்கொள்வதற்கு கஜேந்திரகுமார் தயாராக இருப்பதில்லை. இரண்டாவது கஜேந்திரகுமாரை எவரும் விலைக்கு வாங்க முடியாது. மூன்றாவது தொடர்ச்சியாக அடையாளப்போராட்டங்களை நடாத்திக் கொண்டிருப்பதாகும். இன்றுள்ள கட்சிகளில் போராட்டங்களை தொடர்ச்சியாக நடாத்துவது முன்னணி மட்டும் தான்.
மக்களுக்கும் கட்சிக்குமான உறவில் தான் முன்னணி கோட்டை விடுகின்றது. பல சந்தர்ப்பங்களில் மக்கள் திரள் எழுச்சிக்கு முன்னணியே தடையாகி விடுகின்றது. தமிழ்த்தேசிய சக்திகள் பலரை தமிழ்த்தேசிய அரசியலுக்கு வெளியே தள்ளி விடுகின்றது. தவிர, அரசியல் என்பது மூலோபாயத்தை மட்டுமல்ல தந்திரோபாயத்தையும் கொண்டது என்பதை கணிப்பில் எடுக்க தவறுகின்றது. தந்திரோபாய அரசியல் அதனிடம் மருந்துக்குக் கூட கிடையாது. மக்கள் திரள் அமைப்புக்களை தானும் கட்டுவதில்லை. மற்றவர்களையும் கட்டவிடுவதில்லை.
தற்போது இரண்டு நெருக்கடிகளுக்கு தமிழ் அரசியல் முகம் கொடுக்கின்றது. ஒன்று பெருந்தேசியவாதத்திற்கு முகம் கொடுத்தல். இரண்டாவது சர்வதேச அரசியலை கையாளல். இரண்டு செயல் திட்டங்களையும் ஒருங்கிணைவு அரசியல் இல்லாமல் சிறிது கூட முன்னெடுக்க முடியாது. முன்னணிக்கு இந்த உண்மை தெரியாத ஒன்றல்ல. உண்மைகள் கண்டுகொள்ளப்படுவதை கட்சி அரசியல் தடுக்கின்றது.
தாக்குதலோடு தொடர்புடைய ஏனைய விவகாரங்களையும் தொடர் உறக்கத்திலிருக்கும் தமிழ் அரசியலை எவ்வாறு தட்டியெழுப்புவது பற்றியும் அடுத்த வாரங்களில் பார்ப்போம்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)