
posted 25th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
சனல் 4 வெளியிட்ட காணொளி குறித்து சர்வதேச விசாரணை
“2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் கொழும்பில் இடம்பெற்ற ஒரு சில தற்கொலை குண்டு தாக்குதல்கள், கிளைமோர் தாக்குதல்கள் என்பன ராஜபக்ச அரசின் புலனாய்வு பிரிவின் ஆதரவுடன் இடம்பெற்ற சம்பவங்களாகும். ஆனால் அவை புலிகள் அமைப்பின் கணக்கில் போடப்பட்டன. சம்பந்தப்பட்ட குடும்பங்கள் இன்று இதனை உணர ஆரம்பித்துள்ளன. முன்னாள் அமைச்சர்கள் கூட இராணுவ புலனாய்வு பிரிவின் உதவியுடன் தென்பகுதியில் வைத்து கொலை செய்துள்ளனர். அந்த பழியும் புலிகள் மீது போடப்பட்டது. இதுதான் வரலாறு”
இவ்வாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வெள்ளிக் கிழமை (22) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர், மேலும் கூறியவை வருமாறு;
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற பின்னர் , “நான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்திருந்தால் இந்த தாக்குதல் நடத்திருக்காது.” என்று கோட்டாபய அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன்பிற்பாடு “நான் ஜனாதிபதியாக வந்தால் மக்கள் அச்ச உணர்வு இன்றி வாழலாம்” எனவும் அறிக்கை விடுத்திருந்தார். எனவே, தாக்குதல் சம்பவத்தின் பின்னணி செயற்பட்டது யாரென்பது அனைவருக்கும் தெரியும். ராஜபக்ஷ குடும்பம் ஆட்சியை பிடிப்பதற்காக செய்த முயற்சிதான் இது.
21/4 தாக்குதலுக்கு முன்னதாக வவுனதீவில் இரு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டு ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இந்த செயலை முன்னாள் போராளிகள் செய்தனர் என இலங்கையின் புலனாய்வு பிரிவு உறுதி செய்து, கைதுகள் கூட இடம்பெற்றிருந்தன. அப்போது இச்சம்பவத்துடன் முன்னாள் போராளிகள் தொடர்புபடவில்லை, அது தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரியிருந்தேன்.
இதேபோல 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற சில சம்பவங்கள் கூட புலிகளின் கணக்கில் போடப்பட்டது. தாங்கள் ஆட்சி செய்வதற்காக யாரை வேண்டுமானாலும் கொல்வார்கள், என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், இதுதான் அவர்களின் வரலாறு.
அரசியல் கைதிகளிடம் கூட இவர்கள் பலவந்தமாக வாக்குமூலம் பெற்றிருப்பார்கள். ஒரு சில தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, ஏனையோரும் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள்மீது போலி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கலாம். மீள் விசாரணை இடம்பெற வேண்டும்.
அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் – 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் மட்டும் அல்ல, இறுதிப்போர் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட காணொளி தொடர்பிலும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)