வாழ்வாதார உதவியும், இழப்பீடும் வழங்குக

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர்ப் பிரதேசத்தில் உக்கிரமடைந்துள்ள கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள கரைவலை மீன்பிடியாளர்களுக்கு வாழ்வாதார உதவிகளும், இழப்பீடும் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலரிப்பினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிந்தவூரின் தென்பகுதி கரைவலை மீன்பிடி சங்கங்கள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரில் மேற்படி கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னெப்போதுமில்லாத வகையில் ஏற்பட்டுள்ள உக்கிர கடலரிப்பினால், கடல் மீன்பிடியில் ஈடுபட முடியாதவாறு பாதிப்படைந்து தமது வாழ்வாதாத்தை இழந்துள்ள கரைவலை மீன்பிடியாளர்களின் மீன்பிடி உபகரணங்கள், மற்றும் உடமைகளும் பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலைக்கு உட்பட்டுள்ளதாக மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மீனவர் ஓய்வு மண்டபம், மற்றும் மீனவர் கட்டிடங்கள் என்பனவும், மீன்படி உபகரணங்களைப் பாதுகாப்பாக வைத்து வந்த மீனவவாடிகளும் கடலரிப்பால் காவு கொள்ளப்பட்டுள்ள அதேவேளை,

குறித்த கரைலை மீன்பிடித்தொழில் மூலமே தினமும் தமது ஜீவனோபாயத்தை முன்னெடுத்து வந்த கரைவலை மீனவத்தொழிலாளர்கள் தொழில் இழந்து பரிதவிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக கரைவலை மீன்பிடிச்சங்கங்கள் இந்த மகஜர் மூலம் அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளன.

எனவே வாழ்வாதார உதவிக்கான நிவாரணம் வழங்குவதுடன், அழிந்துபோன மீனவ உபகரணங்களுக்கான இழப்பீடுகளை வழங்க முன்வருமாறும் மீனவர்கள் கோரியுள்ளனர்.

ஒலுவில் துறைமுக நிர்மாண சாத்தியக்கூற்று அறிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதன் விளைவாகவே அயல் கிராமமான நிந்தவூர் மிக மோசமான கடலரிப்புக்குட்பட்டு வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வாழ்வாதார உதவியும், இழப்பீடும் வழங்குக

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)