
posted 21st September 2022
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். 19 மாலை மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக ஒலி பெருக்கி மூலமாக எச்சரித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் கைது நடவடிக்கைக்கு அஞ்சி நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இதனையடுத்தது இன்று காலை மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களை நோக்கி கற்களை கொண்டு வீசி விரட்டியுள்ளனர். மேலும் விசைப்படகில் இருந்த மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை மீன் பிடி வலைகளை வெட்டி கடலில் வீசியுள்ளனர்.
இதனால் மீனவர்கள் கைது நடவடிக்கைக்கு அஞ்சி ராமேஸ்வரம் துறைமுகத்தை நோக்கி வந்தனர். நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடிக்க விடாமல் இலங்கை கடற்படை தொடர்ந்து விரட்டியதால் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் படகு ஒன்றுக்கு சுமார் 70ஆயிரம் வரை நஷ்டத்துடன் மீனவர்கள் கரை திரும்பினர்.
நேற்று நள்ளிரவு எல்லை தாண்டி மீன் பிடித்தாக ஜெகதாபட்டிணம் மீனவர்கள் எட்டு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில், இன்று காலை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கற்களை கொண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேட்டி:
ஜேசுராஜா – ராமேஸ்வரம் மீனவ சங்க தலைவர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)