
posted 8th September 2022
“நாட்டில் மிக மோசமாக ஊடுருவியுள்ள போதைப்பொருள் வியாபாரம் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இன்று சமூகத்தில் ஊடுருவி வருகின்றது. எனவே, பெற்றோர், மிக விழிப்புடன் செயற்படவேண்டும்.”
இவ்வாறு, கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரி.எச்.டி.எம்.எல். புத்திக கூறினாரர்.
இலங்கையில் பொலிஸ் சேவையின் 156 ஆவது நிறைவையொட்டிய பொலிஸ் வார நிகழ்வின் ஓரங்கமாக நிந்தவூர் அல் - மஸ்லம் வித்தியாலயத்தில் இடம்பெற்ற வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நிந்தவூர் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டிலும், பெஸ்ட் ஒப் யங் நிறுவன அனுசரணையுடனும் நிகழ்வு நடைபெற்றது.
நிந்தவூர் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும், பிரதான பொலிஸ் பரிசோதகருமான எம்.எம். அஷ்ரப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வு வித்தியாலய அதிபர் இஸ்ட் . அகமதின் வரவேற்புடையுடன் ஆரம்பமாகியது.
நிகழ்வில் நிந்தவூர் பொலிஸ் ஆலோசனைக் குழுவின் தலைவரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமான எம்.ஏ.எம். றசீன் உட்பட கல்வி அதிகாரிகள், முக்கியஸ்த்தர்கள் பலரும் விசேட அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக நிகழ்வில் தொடர்ந்து உரையாற்று கையில் பின்வருமாறு கூறினார்.
“நாட்டையும், மக்களையும் பாதுகாத்து சட்டம் ஒழுங்கை நேர்த்தி பெறச் செய்துள்ள பொலிஸ் சேவை இன்று 156 வருடங்களை நிறைவு செய்த பெருமிதத்தில் திழைத்து நிற்கின்றது.
நாட்டில்புரையோடிப்போன முப்பது வருடயுத்த காலத்தைக் கடந்து நிம்மதிப் பெரு மூச்சு விட்டுள்ள நிலையில் அதைவிடவும் மோசமான யுத்தத்திற்கு நாம் முகம் கொடுத்து எமது வருங்கால சந்ததியினரைப் பாதுகாக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளோம்.
நவீன இலத்திரனியல் ஊடகப் பயன்பாடு, செல் போன்கள் பாவனை எம் இளம் சந்ததியினரைக் கெட்ட வழிகளில் கவர்ந்திழுக்கும் அதேவேளை இன்று நாட்டில் வேரூன்றிவரும் போதைப் பொருள் பாவனையும் எமக்கு இன்று சவாலாகமாறியுள்ளது.
குறிப்பாக சமூகத்தில் போதைப்பொருள் பாவனை கோரத் தாண்டவமாட முனைந்துள்ள நிலையில், போதைப்பொருள் பாவனையை சமூகத்திலிருந்து ஒழித்துக்கட்ட வேண்டிய யுத்தம் இன்று முதன்மை பெற்றுள்ளது.
அதிலும் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்ட போதைப் பொருள் வியாபாரம் விஸ்பரூபமெடுக்காதவாறு விழிப்புடனான செயற்பாடுகளை நாம் முன்னெடுக வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம்.
குறிப்பிட்ட சில மணிநேரங்களே பாடசாலைகளில் மாணவர்களுள்ள போதும், பெரும்பாலான நேரங்கள் பெற்றோருடன் வீடுகளிலேயே தங்கியுள்ளனர்.
எனவே, பெற்றோர்கள் தமது பிள்ளைகள் தொடர்பில் மிகுந்த கரிசனை கொள்ள வேண்டும்.
குறிப்பாக போதைவஸ்து பாவனை, விற்பனை தொடர்பில் இலக்கு வைக்கப்பட்டுள்ள மாணவ சமுதாயத்தை நாம் பெரிதும் பாதுகாக்க வேண்டும். வழிதவறும் நிலைக்கு மாணவ சமுதாயம் தள்ளப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
முக்கியமாகப் பெற்றோர் தமது ஆசைகளை மட்டும் நிறைவேற்றுவதற்கு மாணவர்களைக் கட்டாயப்படுத்தாது, அவர்களுக்கு ஆர்வமுள்ள துறைகளில் திறமைகளை வளர்த்துவிட வேண்டும்” என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)