
posted 12th September 2022
இலங்கையின் முதலாவது தமிழ்க் கத்தோலிக்க ஆயராகவும், யாழ் ஆயராகவும் இருந்த மேதகு எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகை அவர்களின் மறைவின் 50வது ஆண்டு நிறைவில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வாக அவரின் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது.
யாழ் மறைமாவட்டத்தின் முதலாவது சுதேச ஆயராக பணியாற்றி மறைந்த ஆயர் எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகை அவர்களின் உருவச்சிலை திறப்பு விழா நிகழ்வு 12 ஆம் திகதி திங்கட்கிழமை (12.09.2022) காலை யாழ் புனித மரியன்னை பேராலய வளாகத்தில் யாழ் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் நடை பெற்றது.
இந்நிகழ்வில் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஆயர் அவர்களின் உருவச்சிலையினை திரை நீக்கம் செய்து வைத்தார்.
யாழ் மறைமாவட்டத்தின் மூத்தகுரு அருட்திரு இம்மானுவேல் அடிகளார் ஆயர் அவர்களின் விபரங்கள் அடங்கிய நினைவுக்கல்லை திறந்து வைத்தார்.
ஆயர் எமிலியானுஸ்பிள்ளை அவர்களின் மறைவின் 50வது ஆண்டு நிறைவில் முன்னெடுக்கப்பட்ட இந் நிகழ்வில் குருக்கள், துறவிகள், இறைமக்களெனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ஆயர் எமிலியானுஸ் பிள்ளை ஆண்டகை அவர்கள் தமது பணிக்காலத்தில் யாழ். மறைமாவட்டத்தில் அளப்பரிய பணிகள் ஆற்றியவர் என்பதுடன் இலங்கையின் முதலாவது தமிழ் கத்தோலிக்க ஆயர் இவரே என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)