மன்னாரில் மனித உரிமைகள் தொடர்பான களவாடப்பட்டுள்ளன

மன்னார் மாவட்டத்தில் மனித உரிமைகள் சார்ந்த மற்றும் பாதிக்கப்பட்டு வரும் மக்கள் சார்பாக பணியாற்றி வரும் நிறுவனத்தின் அலுவலகம் உடைக்கப்பட்டு முக்கிய ஆவணங்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவம் வெள்ளிக் கிழமை (09.09.2022) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது;

மன்னார் நகர் பகுதியில் சாவக்கட்டு என்னும் பகுதியில் அமைந்துள்ள மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக மனித உரிமைகள் சார்ந்து பணியாற்றி வரும் 'மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம்' என்னும் நிறுவனத்தின் அலுவலகமே இனம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு இந் நிறுவனத்திலிருந்த முக்கிய ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளது என பொலிசில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது சில முக்கிய ஆவணங்கள் புகைப்படக் கருவி (கேமரா) மற்றும் பென்டிரைவ் போன்ற முக்கிய ஆவணங்களே திருடிச் செல்லப்பட்டுள்ளதாகவும், இச் சம்பவம் தொடர்பாக 'பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின்' மன்னார் மாவட்ட இணைப்பாளர் எஸ். திலீபன் சனிக்கிழமை (10) மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள சீசீரிவி கமராவில் இரண்டு நபர்களே இத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதும் கதவின் ஊடாக உள் நுழைந்து அங்கு மேசை மற்றும் ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அலுமாரிகளுக்குள் தேடுதல் செய்வது பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிசார் தீவிர விசாரனையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலமாக மனித உரிமைகள் சார்ந்து பணியாற்றி வரும் இந் நிறுவனம் தற்பொழுது தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு தொடர்பான 100 நாள் செயல் முனைவை மன்னார் மாவட்டத்தில் செயல்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் மனித உரிமைகள் தொடர்பான களவாடப்பட்டுள்ளன

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)