
posted 13th September 2022
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியினர் வெற்றி பெற்று ஆசிய கிண்ணத்தை தம்வசப்படுட்தியதையடுத்து இலங்கை இரசிகர்கள் பெரும் குதூகலத்துடன் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கடந்த ஞாயிறு (11) மாலை இடம்பெற்ற இலங்கை – பாகிஸ்தானுக்கிடையிலான இறுதிப் போட்டியை இலங்கை இரசிகர்கள் தொலைக்காட்சிகளில் மட்டுமன்றி திறந்தவெளி இடங்களில் பெரிய திரைகளிலும், பெருமளவானோர் திரண்டு கண்டுகளித்தனர்,
இலங்கை அணியின் வெற்றித்தகவலறிந்ததும் இரசிகர்கள் பெரும் குதூகலிப்புடன் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அதேவேளை பெருமளவில் வெடிகொளுத்தி ஆர்ப்பரித்தனர்.
பல இடங்களில் இளைஞர்கள் இரவு வேளையாக விருந்தும், இலங்கையின் தேசியக் கொடிகளை ஏந்தியவாற மோட்டார் சைக்கிளில் மகிழ்ச்சி ஊர்வலங்களையும் பிரதேசங்களில் நடத்தினர்.
இதேவேளை இலங்கை அணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பல்வேறு படங்களுடன் கூடிய செய்திகள் முகநூல்களில் நிரம்பி வழிந்த வண்முமிருந்தன.
இதேவேளை ஒரேநாளில் இருவேறு ஆசிய கிண்ணங்களை சுவீகரித்த மகிழ்ச்சிப் பிரவாகத்திலும் இலங்கை மக்கள் திளைத்திருந்தனர்.
அதாவது, 6 ஆவது முறையாகவும் ஆசிய வலைப்பந்தாட்ட சாம்பியனாகவும் இலங்கை மகுடம் சூடியது.
சிங்கப்பூரில் நடைபெற்று வந்த 2022 ஆசிய கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டியில் சிங்கப்பூரை வீழ்த்தி இலங்கை அணி 6 ஆவது தடவையாக சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
மேற்படி இரு வெற்றிப்பிரவாகத்திலும் இலங்கை மக்கள் திளைத்திருக்கும் அதேவேளை, வெற்றிவாகை சூடிய அணிகளை ஜனாதிபதி உட்பட அரசியல் தலைவர்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)