
posted 13th September 2022
போதைப் பொருளுக்கு அடிமையான சகோதரனால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட இளம் பெண் உயிரை மாய்த்துள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
20 வயதுடைய இளம் பெண்ணே உயிரை மாய்த்துள்ளார். அவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் பாவித்த மூத்த சகோதரன் தனது சகோதரியை வன்புணர்வுக்கு உள்படுத்தியுள்ளார். அதனால் விரக்தியடைந்த சகோதரி குரல் பதிவில் நடந்தவற்றை பதிவு செய்து நண்பிக்கு அனுப்பிவிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார்.
மூத்த சகோதரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. இதன்போது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் உள்ளிட்ட உயிர்க்கொல்லி போதைப்பொருள் பாவனை இளவயதினரிடையே அதிகரித்துள்ளதனால் பல்வேறு சமூகப் பிறழ்வு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதுடன் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)