பொலிஸ்வார நிகழ்வுகள் பயனுள்ளவை

“நாட்டுக்கும், மக்களுக்கும் அளப்பரிய சேவைகளாற்றிவரும் 156 வருடகால பழம் பெருமை மிக்க பொலிஸ் சேவையின் மகத்துவத்தை உணர்த்தும் வகையிலும், பிரதேசத்திற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையிலும் தேசிய பொலிஸ் வார நிகழ்வுகள் நிந்தவூர்ப் பிரதேசத்தில் சிறப்புற இடம்பெற்று வருகின்றன”

இவ்வாறு, தேசிய பொலிஸ் வாரத்தையொட்டி, நிந்தவூர் பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, நிந்தவூர் கடற்கரை பிரதேசங்களைச் சுத்தப்படுத்தும் சிரமதான வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் கூறினார்.

தேசிய பொலிஸ் வார நிழக்வுகளைப் பயனுள்ள வகையிலும், சிறப்புறவும் ஏற்பாடு செய்த நிந்தவூர் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும், பிரதான பொலிஸ் பரிசோதகருமான எம்.எம். அஷ்ரப் மற்றும் சக பொலிஸ் உத்தியோகத்தர்களையும் இதன்போது பிரதே செயலாளர் வெகுவாகப் பாராட்டினார்.

நிலைய பதில் பொறுப்பதிகாரி அஷ்ரப் தலைமையில், சிரமதான நிகழ்வின் ஆரம்ப வைபவம் இடம் பெற்றது.

இந்த ஆரம்ப வைபவத்தில் பொலிஸ் நிலைய ஆலோசனை சபைத் தலைவரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமா எம்.ஏ.எம். றசீன், பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். சுல்பிகார், சமூர்த்தி சங்க சிரேஷ்ட தலைமைப்பீட உத்தியோகத்தர் ஏ.சீ. அன்வர் உட்பட மேலும் பிரமுகர்கள் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

பிரதேச செயலாளர் சட்டத்தரணி அப்துல் லதீப் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் கடந்த 156 வருட காலமாக அளப்பரிய சேவைகளை ஆற்றிவரும் பொலிஸ் சேவையை விதந்து பாராட்டத்தக்கவையாகும்.

இந்த வகையில் முன்னர் பொலிஸாரை அச்சம், பீதியுடன் நோக்கிய மக்களின் பார்வை நீங்கி பொலிஸ் - பொதுமக்கள் நல்லுறவு மேலோங்கிவருகின்றது.

இன்றைய இந்த சிரமதான நிகழ்வில் கடற்றொழிலாளர்கள், சமுர்த்தி பெறும் பயனாளிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளெனப் பெருமளவானோர் பங்கு கொள்வது இந்த நல்லுறவுக்கு எடுத்துக்காட்டாகும்.

இன்றைய கடற்கரைப் பிரதேச சுத்திகரிப்பு சிரமதான வேலைத் திட்டம் பெரிதும் பயனுள்ளதாகும். இது நமது உரிமை எனும் உணர்வை வலுப்படுத்தும் செயறப்பாடுமாகும்.

நாம் நமது நலனுக்காகவும், கடற்கரையை நாடி வருவோருக்காவும் சத்தமாக வைத்திருப்பதில் கவனம் கொள்ள வேண்டும்.

தேசிய பொலிஸ் வார நிகழ்வுகளை மிகப் பயனுள்ளவையாக நெறிப்படுத்தியுள்ள நிந்தவூர் பொலிஸ் நிலையப் பதில் பெறுப்பதிகாரி அஷ்ரபும், நிலைய சக உத்தியோகத்ரர்களும் பெரிதும் பாராட்டக்குரியவர்களாவர் என்றார்

பொலிஸ்வார நிகழ்வுகள் பயனுள்ளவை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)