பொலிஸ் சேவைக்கு பாராட்டு

“பொலிஸ் சேவைகள் மறுசீரமைக்கப்பட்டு, பரவலாக்கலின் கீழ் மக்களின் காலடிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் பொலிஸ் சேவையை சரியாகப் பயன்படுத்தும் வண்ணம் நல்லுறவை வளர்க்க முன்வரவேண்டும்.”

இவ்வாறு நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் கூறினார்.

இலங்கை பொலிஸ் சேவையின் 156ஆவது வருட நிறைவையொட்டிய தேசிய பொலிஸ் வார ஆரம்ப தின நிகழ்வு (பொலிஸ் தினம்) ஒன்று, நிந்தவூர் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று (சனி) சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதேச செயலாளர் மேற்கண்டவாறு கூறினார்.

நிந்தவூர் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியும், பிரதம பொலிஸ் பரிசோதகருமான எம்.எம். அஷ்ரப் தலைமையில், பொலிஸ் நிலைய வளாகத்தில் நிகழ்வு நடைபெற்றது.

இலங்கையின் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரம ரத்னவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மதவழிபாடுகள், நலன்புரி நிகழ்வுகளை உள்ளடக்கியதாகவும், பொது மக்களின் பங்கு பற்றுதலுடனும் பொலிஸ் வார ஆரம்ப நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஆரம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் மற்றும் பொலிஸ் கீதம் பாடப்பட்டதுடன், மதங்களின் பிரார்த்தனைகளுடன், மறைந்த பொலிஸாருக்காக இரு நிமிட மௌனமும் அனுஷ்டிக்கப்பட்டது.

பிரதேச செயலாளர் சட்டத்தரணி அப்துல் லதீப் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“மக்கள் நல்வாழ்வை நோக்காகக் கொண்டும், மக்கள் பாதுகாப்புக்காகவும், நாட்டின் பாதுகாப்பிற்காகவும் சேவையாற்றிவரும் பொலிஸ் சேவை நிச்சயம் பாராட்டப்பட வேண்டும்.

அன்று பொலிஸ் - பொது மக்கள்களிடையே காணப்பட்ட நிலமைகள் மாறி இன்று பொலிஸ் பொதுமக்கள் நல்லுறவு மோலோங்கிய நிலையிலுள்ளது.

சமூகத்தில் புரையோடிப்போயுள்ள போதைப் பொருள் பாவனை மற்றும் வேண்டத்தகாத செயற்பாடுகளை ஒழித்துக்காட்டி சமூக சீர்திருத்தங்களுக்கு பொலிஸ் சேவை அளப்பரிய பங்காற்றி வருகின்றது.

பொலிஸ் திணைக்களத்தின் பணிகள் சட்ட அமுலாக்கத்தில் பிரதான பணியாகும். பொது மக்கள் எதிர்பார்க்கும் பணியும் இதுவாகும்.” என்றார்.

பதில் பொறுப்பதிகாரி எம்.எம். அஷ்ரப், ஆலோசனைக் குழுத்தலைவர் எம்.ஏ.எம். றசீன், மௌலவி ஜௌபர் உட்பட பலர் உரையாற்றினர்.

நிகழ்வில் உயிர்நீத்த பொலிஸாரின் உறவினர்களுக்கும், ஓய்வு பெற்ற பொலிஸாருக்கும் நலன்புரி உதவிகளும் வழங்கப்பட்டன.

இன ஒற்றுமைக்கும், பொலிஸ் பொது மக்கள் நல்லுறவுக்கும் எடுத்துக்காட்டான நிகழ்வாக இந்த நிகழ்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் சேவைக்கு பாராட்டு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)