பெருத்த ஏமாற்றம் கிடைத்துள்ளது - தென்கிழக்கு கல்விப் பேரவை
பெருத்த ஏமாற்றம் கிடைத்துள்ளது - தென்கிழக்கு கல்விப் பேரவை

ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்டில் அரச சேவை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு பாரிய அநீதியிழைக்கப்பட்டிருப்பதாக தென்கிழக்கு கல்விப் பேரவை கவலை தெரிவித்துள்ளது.

இது குறித்து அப்பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அரச சேவை ஊழியர்களின் சம்பளமோ, ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவோ சற்றும் அதிகரிக்கப்படாமல் கைவிடப்பட்டமை பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக அரச சேவை ஊழியர்களும், ஓய்வூதியர்களும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் குறித்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இதன் மூலம் இவர்கள் அரசாங்கத்தினால் கணக்கில் எடுக்கப்படாமல் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இவர்கள் அரசாங்கத்தினால் கைவிடப்பட்டிருப்பதானது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

அதிபர் மற்றும் ஆசிரியர்களின் தொடர் போராட்டம் காரணமாக அவர்களது சம்பளத்தை அதிகரிப்பதற்கு கடந்த பட்ஜெட்டில் நிதியொதுக்கப்பட்டிருக்கிறது. அப்போது கூட அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

இதை விட தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மூன்று, நான்கு மடங்காக அதிகரித்துள்ள சூழ்நிலையில், இவர்களுக்கு ஒரு சதம் கூட சம்பள அதிகரிப்போ, விசேட கொடுப்பனவோ வழங்க எந்த முன்மொழிவும் மேற்கொள்ளப்படவில்லை. அரச சேவை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் வாழ்க்கைச் சுமைக்கு ஓரளவாவது ஆறுதலளிக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் சிறுதொகை அதிகரிப்பைக் கூட வழங்க அரசாங்கம் முன்வராதிருப்பதையிட்டு எமது அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நிலையில் இத்தவறை நிவர்த்தி செய்யும் பொருட்டு இவர்களுக்கு ஏதாவது நிவாரணம் அளிக்கும் வகையிலான திட்டமொன்றை விசேடமாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் முன்வர வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெருத்த ஏமாற்றம் கிடைத்துள்ளது - தென்கிழக்கு கல்விப் பேரவை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)