
posted 29th September 2022
மன்னார் மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து கிராம அலுவலகர் பிரிவுகளில் உள நல ஆற்றல் படுத்தல் உளவியல் தொடர்பான விழப்புணர்வு செயல்பாட்டை மன்னார் 'மெசிடோ' நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.
இது தொடர்பாக மன்னார் 'மெசிடோ' நிறுவன பணிப்பாளர் யட்சன் பிகிராடோ தெரிவிக்கையில்;
பெண் சிறார்கள் தொடர்பான வன்முறைகள் அதுவும் கொவிட் காலத்துக்குப் பின்னர் அதிகரித்துக் கொண்டு செல்வது கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது எனவும், இதை முன்னிட்டு கிராம மட்டங்களில் இதற்கான விழிப்புணர்வு அவசியம் தேவை என்பதை நாங்கள் உணர்ந்து இத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இது இடம்பெற்று வருகின்றது.
'மெசிடோ' நிறுவனமானது ஒவ்வொரு கிராமங்களிலும் குழுக்களை நிறுவி பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான வன்முறைகள் இடம்பெறா வண்ணம் கண்காணிக்கும் திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து இலகுவான முறையில் இதற்கான தீர்வுகளை பெறுவதில் கவனம் செலுத்தப்படுகின்றது.
ஆகவே, சிறுவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் சேவை செய்யக் கூடியவர்களுக்கான பயிற்சி பட்டறைகளையே நாங்கள் தற்பொழுது முன்னெடுத்து வருகின்றோம்.
இவர்களுக்கு பல்வேறான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு அடிப்படையான சட்டங்கள் தொடர்பாகவும் உளவள தொடர்பான பயிற்சிகள் பொது இடங்களுக்கான தலைமைத்துவ பயிற்சி மற்றும் சமூகத்தில் இளையோர் செயற்திறனை விருத்தி செய்து இவர்கள் சுயமாக இயங்கக் கூடிய ஆளுமை கொண்டவர்களை உருவாக்கம் செய்யும் திட்டமாக இது செயல்பட்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் பொது வைத்தியசாலையில் உள வளத்துக்கான பொறுப்பாளர் அவர்களையும், அவரின் குழுவினரையும் இணைத்து இத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என யட்சன் பிகிராடோ மேலும் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)