
posted 26th September 2022

டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல்
கடந்த அரை நூற்றாண்டு காலமாக சாய்ந்தமருது பிரதேசத்தின் கல்வி, கலாசார, சமூக முன்னேற்றப் பணிகளில் மிகவும் ஆர்வத்துடன் பங்களிப்பு செய்து வந்த சாய்ந்தமருதின் முதுசொம் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் அவர்களின் மறைவானது சமூகப் பரப்பில் எவராலும் ஈடுசெய்ய முடியாத பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சாய்ந்தமருது ஷூரா சபை வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளது.
சாய்ந்தமருது ஷூரா சபையின் சார்பில் அதன் உப தலைவர் எம்.ஐ.எம். ஜப்பார், செயலாளர் கலீல் எஸ். முஹம்மட் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அந்த அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;
சாய்ந்தமருதின் சிரேஷ்ட வைத்தியரான எம்.ஐ.எம். ஜெமீல், இப் பிரதேசத்திற்கு மட்டும் சொந்தமான ஒருவராக பார்க்கப்படவில்லை. பொதுவாக கிழக்கு மாகாணத்திற்கும் முழு நாட்டுக்கும் தேவையான ஒரு பொக்கிஷமாகவே அவர் கருதப்படுகிறார். அவரது சமூக, இன நல்லுறவுப் பணிகள் அந்தளவுக்கு பரந்து, விரிந்து காணப்பட்டிருந்தது.
இவற்றுக்கப்பால், தான் பிறந்த மண்ணை அவர் மிகவும் நேசித்தார். ஊரின் சமூக, கலாசார, பண்பாடுகளை பேணிப் பாதுகாப்பதிலும், அவற்றின் முன்னேற்றத்திலும் அவர் அதீத கரிசனை கொண்டிருந்தார். தனது பிரதேச மக்களின் வாழ்வொழுங்கு சீர்செய்யப்பட வேண்டுமென்பதில் பெரும் ஆதங்கம் கொண்டிருந்தார். இப்பிரதேசத்தின் கல்வி, கலாசார, பொருளாதார முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்திருந்தார். பிரதேசத்தின் பௌதீக வள மேம்பாட்டிலும், தேவைகள் மற்றும் குறைபாடுகளை இனங்கண்டு நிவர்த்தி செய்வதிலும் அவர் கூடிய கவனம் செலுத்தி வந்தார்.
தனது உழைப்பால் கட்டி வளர்க்கப்பட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தி விட வேண்டுமென்ற வேட்கையுடன் அவர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். சாய்ந்தமருது பிரதேசத்திற்கான தனியான நகர சபையை உரிய அணுகு முறையுடன் வெற்றி கொள்ள வேண்டும் என்ற ஆதங்கம் அவரிடம் காணப்பட்டது. நகர சபைக் கோஷத்தைக் காரணம் காட்டி ஏனைய அபிவிருத்திகளை புறமொதுக்கி, ஊரை இன்னும் பின்தங்கிய நிலைக்கு இட்டுச் செல்லக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தார்.
இவ்வாறான பின்னணியுடன் ஊர் சம்மந்தப்பட்ட அனைத்து விடயங்களையும் சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து, ஒரே குடையின் கீழ் முன் கொண்டு செல்ல வேண்டுமென்ற தூர நோக்கு சிந்தனையுடன் சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சாய்ந்தமருது ஷூரா சபையின் தலைமைத்துவத்தை ஏற்குமாறு எம்மால் விடுக்கப்பட்ட அழைப்பை அவர் தைரியத்துடன் ஏற்றுக் கொண்டு, இந்த அமைப்பை சிறப்பாக வழி நடாத்தியிருந்தார்.
சிவில் அமைப்புகளும், சமூக சேவைகளும் அவரோடு பின்னிப் பிணைந்த விடயங்களாக இருந்தமையினால் மிக முக்கியமான காலகட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்ட ஷூரா சபையை பொறுப்பேற்பதையோ, அதன் ஊடாக ஊர் நலன் சார் விடயங்களுக்காக முன்னிற்பதையோ பெரும் சவாலான விடயமாக அவர் கருதவில்லை. இந்த அமைப்பு உத்வேகத்துடன் செயற்பட்ட மிகக் குறுகிய காலத்தினுள் பல விடயங்களை சாதிப்பதற்கு டொக்டர் ஜெமீல் ஆணி வேராக தொழிற்பட்டிருந்தார்.
இன்று கம்பீரமாக சேவையாற்றிக் கொண்டிருக்கின்ற சாய்ந்தமருது வைத்தியசாலை சில வருடங்களுக்கு முன்னர் மந்த கதியில் இயங்கியது. இதனைக் காரணம் காட்டி, இது மூடு விழாக் காணவிருப்பதாகத் தெரிவித்து, இன்னொரு வைத்தியசாலையுடன் இதனை இணைத்து, இல்லாமல் செய்வதற்கு சுகாதார அமைச்சு மட்டத்தில் திரை மறைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தபோது, ஷூரா சபை உரிய தருணத்தில் தலையிட்டு, அதனை முறியடிக்கும் செயற்பாட்டில் தீவிரமாக இயங்கி வெற்றி கண்டதன் பிரதி பலனாகவே இவ் வைத்தியசாலை பாதுகாக்கப்பட்டது.
இவ்வாறே கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் நியமனத்தில் முரண்பாடுகள் தோன்றி, கல்லூரியில் குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டு, கல்வி நடவடிக்கைகள் சீர்குலையும் அபாயம் ஏற்பட்டபோது, இவ்விடயத்தில் ஷூரா சபை தலையிட்டு, நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொடுத்திருந்தது. இவ்வாறு இன்னும் பல முக்கிய விடயங்களை எமது ஷூரா சபை முன்னின்று கையாள்வதற்கு டாக்டர் ஜெமீலின் தலைமைத்துவம் பெரும் சக்தியாக அமைந்திருந்தது.
சுனாமி அனர்த்தம் இடம் பெற்ற மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் 2005ஆம் ஆண்டு முற்பகுதியில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்று சுனாமியினால் உயிர், உடமை, வீடு, வாசல்களை இழந்த மக்களுக்காக நிவாரண உதவிகளை பெற்றுக் கொடுப்பதிலும் வீடுகளை அமைத்துக் கொடுப்பதிலும் அவர் பெரும் பங்காற்றியிருந்தார்.
அத்துடன் பெரிய பள்ளிவாசல் கட்டிட நிர்மாணத்தை பூர்த்தி செய்தமையும் இப்பிரதேசத்தின் வரலாறுகளை தொகுத்து, ஆவணப்படுத்தி, நூலாக வெளியிட்டமையும் ஏழை மக்களுக்கு உதவுவதற்காக பைத்துஸ் ஸக்காத் எனும் நிதியத்தை ஸ்தாபித்து, அதனை வெற்றிகரமாக முன் கொண்டு சென்றமையும் அன்னாரது மிகப் பெறுமதியான வரலாற்றுச் சேவைகளாக நோக்கப்படுகிறது.
தனது நீண்ட கால மருத்துவ சேவை, பிரதேச நலன்சார் பணிகள், பிராந்திய முன்னேற்றத்திற்கான பங்களிப்பு என்பவற்றுக்கு மேலாக பல்வேறு சிவில் அமைப்புகள் ஊடாக சமூக ஒற்றுமை, இன நல்லுறவு, சக வாழ்வு, சமாதான செயற்பாடுகளிலும் பிற மதப் பெரியார்களுடன் கை கோர்த்து முக்கிய பங்காற்றியிருந்தமை என்றும் போற்றத்தக்க பணியாக அமைந்திருக்கிறது.
வைத்திய சேவையாயினும், பள்ளிவாசல் நிர்வாகமாயினும், சிவில் சமூக செயற்பாடாயினும் இன, மதம் சார் கலாசார செயற்பாடுகளாயினும் அனைத்து விடயங்களையும் உரிய இலக்குகளை வெற்றி கொள்ளும் வகையில் நேர்மையுடன் திட்டமிட்டு நேர்த்தியாக நடைமுறைப்படுத்துவதில் டாக்டர் ஜெமீல் ஓர் உதாரண புருஷராகத் திகழ்ந்தார் என்று சாய்ந்தமருது ஷூரா சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)