
posted 3rd September 2022
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பிலான வரலாறு தெரியாமல் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்றத்தில் பொய் கூறியுள்ளார்.”
இவ்வாறு ஐக்கிய காங்கிரஸ் (உலமா கட்சி) கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் பாராளுமன்றத்தில் கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலகம் தொடர்பில் ஆற்றிய உரை தொடர்பிலேயே அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தமது ஊடக அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்ற ஒன்று அரசாங்கத்தினால் உருவாக்கப்படாத நிலையில் கடந்த மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவில்லை என வியாழேந்திரன் எம்.பி சொல்வதன் மூலம் இவர் வரலாறு தெரியாமல் பாராளுமன்றத்தில் பொய் சொல்லியுள்ளார்
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்ற பெயரில் சட்டப்படியான ஒரு செயலகம் இல்லவே இல்லை என்பது தெரியாத பாராளுமன்ற உறுப்பினராக வியாழேந்திரன் இருக்கிறார்.
1989ம் ஆண்டு கல்முனை செயலகத்துக்கு உதவியாக ஒரு உப செயலகம்தான் உருவாக்கப்பட்டது. ஏற்கனவே கல்முனைக்கென தனியான செயலகம் இருக்கும் நிலையில் புதிய எல்லை இன்றி உப செயலகம் என்பதை தரமுயர்த்தி தனி செயலகமாக ஆக்க வேண்டும் என்ற கடப்பாடு அரசுக்கு இல்லை.
33 வருடமாக இயங்கும் கல்முனை உப செயலகத்துக்கு தமிழ் செயலகம் என்றோ, வடக்கு செயலகம் என்றோ அரசாங்கம் பெயர் வைக்கவில்லை. இப்பெயரை புலி ஆதரவு உப செயலக உறுப்பினர்கள் தமக்கு தாமே வைத்துக்கொண்டார்கள்.
மேற்படி கல்முனை உப செயலகம், பிரதேச செயலகம் - தமிழ் பிரிவு என சொல்லப்பட்ட நிலையில் 01.02.2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட மேற்படி தமிழ் பிரிவின் கடிதத்தில் இனி இப்பெயர் "தமிழ் பிரிவு" என்பதற்கு பதிலாக 2019.02.04 முதல் "வடக்கு" என மாற்றம் செய்யப்படுகிறது என கல்முனை பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.
இதன்படி கல்முனை செயலகம் - வடக்கு பிரிவு என்ற பெயர் 2019ம் ஆண்டு முதல் செயல்படுகிறது என்ற அர்த்தமே தவிர "கல்முனை வடக்கு செயலகம்" என்ற ஒன்று இல்லை என்பது நிரூபிக்கப்படுகிறது.
இந்த உண்மைகளை புரியாமல் ஒரு பொய்யை பல தடவை சொன்னால் அது உண்மையானதாக தெரியும் என்பதற்கிணங்க வியாழேந்திரன் தமிழ் மக்களுக்கு பொய் சொல்லி ஏமாற்றுகிறார்.
இந்த பொய்யையெல்லாம் கேட்டுக் கொண்டு இஞ்சி தின்ற குரங்கு போன்று இருக்கிறார்கள் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவற்றின் தலைவர்களும்.
இந்த ஊமைகளுக்கெதிராக கோஷம் எழுப்ப முடியாத கோழைகளாக கல்முனை முஸ்லிம்கள் உள்ளனரா?

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)