பலவகைச் செய்தித் துணுக்குகள்

வடக்கு பகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்

இந்திய இழுவைமடித் தொழிலால் வடக்கு பகுதி மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பில் இந்திய துணை தூதுவர் ராகேஷ் நட்ராஜூக்கு தெரிவிக்கப்பட்டது.

வடக்கு மாகாண கடற்றொழில் இணையமும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினர் நேற்று (27) அவரை சந்தித்து பேசினர்.

இந்திய துணைத் தூதரகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தற்போது மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பாக இந்திய அரசாங்கத்துக்கு எடுத்துக் கூறும் விதமாக குறித்த இந்தப் பேச்சு இடம்பெற்றது. இந்திய இழுவை மடித் தொழிலால் வடக்கு பகுதி மீனவர்களான நாம் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக இந்திய முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடுவதற்கு அனுமதி பெற்று தருமாறு கேட்டுக் கொண்டதாக கேட்கப்பட்டதாகவும், அதற்கு துணைத் தூதுவர் சம்மதம் தெரிவித்தார் என்றும் இணையத்தின் இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் தெரிவித்தார்.



அகதிகளாக நகைக் கொள்ளையர் தமிழகத்தில் கைது

கிளிநொச்சியில் நகைக்கடைக் கொள்ளையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், அகதிகள் என்ற போர்வையில் தமிழகத்துக்கு தப்பிச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மண்டபம் முகாமில் தங்கியிருந்த இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டு, புழல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் கிளிநொச்சியிலுள்ள நகைக்கடை வர்த்தகர் ஒருவரை கடத்தி அவரிடமிருந்த தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தன. இந்த கொள்ளையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், குறித்த இருவரும் அகதிகள் என்ற போர்வையில் தமிழகத்துக்கு தப்பியோடினர்.

அச்சுவேலியைச் சேர்ந்த கிருபாகரன் (வயது - 30), கிளிநொச்சியை சேர்ந்த சந்திரகுமார் (வயது - 36) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு எதிராக மரக்கடத்தல் தொடர்பாக கிளிநொச்சி நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


தேசிய எல்லை மீள்நிர்ணயக் குழுவின் சுற்றறிக்கை

தேசிய எல்லை மீள்நிர்ணயக் குழுவின் சுற்றறிக்கைக்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான எல்லை மீள் நிர்ணயத்தை முடிவு செய்வதற்கான இறுதிக்கட்ட கலந்துரையாடல் மேலதிக அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் 28.09.2022 அன்று காலை இடம்பெற்றது.

இதன்போது மாவட்ட எல்லை மறுசீரமைப்பு குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையானது சமர்ப்பிக்கப்பட்டு ஆராயப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டன.
கலந்துரையாடலின் இறுதியில் இறுதியான அறிக்கை தயாரிக்கப்பட்டு அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இக் கலந்துரையாடலில் சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர், மாவட்ட புள்ளிவிபரவியலாளர், நிர்வாக கிராம அலுவலர்கள், மாவட்ட செயலக பிரதேச செயலகங்களின் காணி தொடர்பான உத்தியோகத்தர்கள், நில அளவை திணைக்கள உத்தியோகத்தர்கள், துறைசார் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் ஏன் வெளிநடப்புச் செய்தனர்?

யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றல் பொறிமுறைக்காக யப்பான் அரசு வழங்கவிருந்த வாகனங்களிற்கான வழங்கப்பட்ட நிதியை, சபை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தாமல் திருப்பி அனுப்ப முற்பட்டதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அவமதித்ததாகவும் குறிப்பிட்டு, யாழ். மாநகரசபையின் மணிவண்ணன் அணி உறுப்பினர்களைத் தவிர ஏனைய சகல உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று (28) மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு ஜப்பானியத் தூதரகத்தினால் அன்பளிப்புச் செய்யப்படவிருந்த நவீன திண்மக் கழிவகற்றல் வாகனங்களைப் பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

கழிவகற்றல் வாகன கொள்வனவு, வாகனங்களின் தீர்வை மற்றும் இதர செலவுகளுக்காக ஜப்பானியத் தூதரகத்தால் யாழ். மாநகர சபைக்கு வழங்கப்பட்ட ரூபாய் ஒரு கோடியே 43 லட்சத்து 26 ஆயிரத்து 466 ஐத் திரும்பச் செலுத்தும்படி ஜப்பானிய தூதரகம் கோரியது.

இதற்கு யாழ். மாநகர சபை முதல்வரும், ஆணையாளரும் சம்மதம் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர். எனினும், மாநகர சபைக்குத் தெரியப்படுத்தாமல் “பணத்தைத் திரும்பச் செலுத்த முடிவு செய்துள்ளோம்” எனச் சபை சார்பில் ஆணையாளர் அனுப்பிய கடிதம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர்.
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு தெரியாமல் ஆணையாளர் எதேச்சையாக ஒரு கோடியே 43 இலட்சத்து 26 ஆயிரத்து 466 ரூபா தொடர்பில் முடிவெடுத்தது தவறு. ஆணையாளர் தவறை ஏற்றுக் கொள்ளவேண்டும் என வலியுறுத்தினர்.

ஆணையாளர் தவறை ஏற்கவில்லை. இந்நிலையில், ஜப்பானியத் தூதரகத்தால் அனுப்பப்பட்ட வரைவின்படியே ஆணையாளர் கடிதத்தில் கையொப்பமிட்டார் என முதல்வர் தெரிவித்தார்.

இதனைப் பரிகசித்த உறுப்பினர்கள், ஆணையாளர் யாழ்ப்பாண மாநகர சபைக்கு ஆணையாளரா? அல்லது ஜப்பானிய மாநகர சபைக்கு ஆணையாளரா? எனக் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து வாக்குவாதங்கள் இடம்பெற்ற போதும் உறுப்பினர்கள் கோரியபடி ஆணையாளர் மற்றும் முதல்வர் தவறை ஏற்றுக்கொள்ளவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிக்காலத்தில், அந்த நிதியை திறைசேரி மீளப்பெற அனுமதியளித்து கூட்டமைப்பினர் அனுப்பிய கடிதத்தை மணிவண்ணன் தரப்பினர் சுட்டிக்காட்டி, அதற்கு யாருடைய அனுமதியைப் பெற்றீர்கள் எனக் கேள்வியெழுப்பினர். இதன்போது, ஈ.பி.டி.பியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவுக்கும் கடிதம் அனுப்பப்பட்டதாகவும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மணிவண்ணன் தரப்பினர் கூறியதற்கு ஈ.பி.டி.பி எதிர்ப்பு தெரிவித்தது. டக்ளஸ் தேவானந்தாவுக்கு நாளாந்தம் பல அழைப்புக்கள் வருவதாகவும், இந்த கடிதத்தை விசேடமாக அனுப்பியிருக்கவேண்டுமென்றும் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர். இவ்வாறு உறுப்பினர்கள் வெளியேறியதையடுத்து போதிய கோரம் இல்லாத காரணத்தினால் சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும், மூடுமந்திரமாக சபை நடத்தப்படுவதைக் கண்டித்தும், ஆணையாளர் சபையில் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுமே உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY