பலவகைச் செய்தித் துணுக்குகள்

பெண்ணை தாக்கி கொள்ளையர்கள் சூறையாடினர்

வீடொன்றுக்குள் புகுந்த இருவர் தனியாக இருந்த பெண்ணை தாக்கிக் காயப்படுத்திவிட்டு நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். அத்துடன், அந்த வீட்டின் கேற், கதவு, சி. சி. ரீ. வி. கமெராக்கள் என்பவற்றை உடைத்துச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (27) பின்னிரவு வேளை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொல்புரம் கிழக்கில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக அங்கு சென்ற பொலிஸார் 35 வயது பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்தனர். தாக்குதலுக்கு முன்னதாக பெண்ணின் கணவர் வெளியேறியிருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தின்போது நகைகள் கொள்ளையிடப்பட்டன என்றும், உறவினர்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.



ஆண்டுகளின் பின்னர் ஆரம்பமான விசாரணைகள்
நல்லூர் பின்வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பாதுகாப்பு வேலி, அரச நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டமை தொடர்பில் 4 ஆண்டுகளின் பின்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சால் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சுக்கு ஊடாக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீட்டில் பாதுகாப்பு வேலிக்கான நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கு அமைவாக அது அமைக்கப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு நல்லாட்சி அரசாங்க காலத்தில் பொலிஸார் தடை உத்தரவு பெற்றனர். இதன்போது நீதிமன்றத்துக்கு முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களில், திலீபனின் நினைவுத் தூபி அரச நிதியில் அமைக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் பொலிஸாரால் சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு இந்த விடயம் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் மூன்று மாதங்களுக்கு முன்னர் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு மிகக் காட்டமான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு அரச நிதியை எவ்வாறு ஒதுக்க முடியும்? என்று அதில் கேள்வி எழுப்பட்டிருந்ததுடன் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு அமைவாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் வாக்கு மூலங்களைப் பெற்றுக் கொள்வதற்காக அமைச்சின் புலன் விசாரணைப் பிரிவினர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளனர்.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

விபத்தில் சிக்கிய பொலிஸ் மரணம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தில் படுகாயமடைந்து மூன்று மாதங்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று திங்கள் இரவு உயிரிழந்தார்.

சுன்னாகம் - வலியபுலத்தை சேர்ந்த கோணேஸ்வரன் ஹரி பிரணவன் (வயது29) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்த ஜுன் மாதம் 13ஆம் திகதி இரவு கடமை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, முன்னால் சென்றுகொண்டிருந்த சைக்கிளுடன் மோதி விபத்துக்கு இலக்கானார்.

பலாலி வீதியில் ஊரெழு பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில், மயக்கமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரை அங்கிருந்தவர்கள் யாழ். போதனா மருத்துவ மனையில் சேர்த்தனர். அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அது பலனளிக்காமல் பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

இவரின் மரண விசாரணைகளை யாழ். போதனா மருத்துவமனையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.


நிராகரிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள்

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று பேரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் வவுனியா மேல் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டன.

செவ்வாய்க் கிழமை (27) வவுனியா மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு தொடர்பான உண்மை விளம்பல் விசாரணை நடந்தபோதே, பிரதிவாதிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் நிராகரிக்கப்பட்டன.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் 16ஆவது சரத்தின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தரப்பிலான உயர் அதிகாரிகளால், மூன்று பிரதிவாதிகளிடமிருந்து தனித்தனியாக குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. அதனை ஏற்றுக் கொள்ளுமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பம் விசாரணைகளின் பின்னர் நேற்று (27) நிராகரிக்கப்பட்டது.

வழக்கின் முதலாம் பிரதிவாதியின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இரா. கண்ணன் நிராகரித்ததுடன், அதற்கான கட்டளையை வவுனியா மேல் நீதிமன்றத்துக்கு நேற்று அனுப்பியிருந்தார்.

ஏனைய இரண்டு பிரதிவாதிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் நேற்று நிராகரிக்கப்பட்டன.

இந்தக் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை தாம் வழங்கவில்லை என வழக்கு விசாரணையின்போது பிரதிவாதிகள் மன்றுக்குத் தெரிவித்தனர். இதற்கமைய, உயர் பொலிஸ் அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை நீதிமன்றம் நிராகரித்தது.

அத்துடன், வழக்கு விசாரணையை எதிர்வரும் ஒக்ரோபர் 14 ஆம் திகதிக்கும் ஒத்தி வைத்தது.

இதேவேளை, பிரதிவாதிகள் மூவரும் கடந்த 12 வருடங்களாக வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது, 2009 ஆண்டு இறுதி போரின்போது முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் அமைப்பினருடன் பயங்கரவாத செயலில் ஈடுபட்டனர் என்று பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY