
posted 26th September 2022
சுமந்திரனால் நடைபெறும் போராட்ட ஒரு போலிப் போராட்டம்
சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் ஒரு போலிப் போராட்டம் என வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஞாயிறு (25) இவர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினர்.
அத்துடன், எமது தொடர்ச்சியான போராட்டம் இன்று 2044ஆவது நாளை எட்டியுள்ளது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தை சிங்களவர்கள் ஒருபோதும் அகற்ற மாட்டார்கள். பயங்கரவாத தடுப்பு சட்டம் என்ற பெயரை தேசிய பாதுகாப்பு சட்டம் என்று மாற்றுவது பற்றி ஒரு பேச்சு உள்ளது. இது சர்வதேச சமூகங்களை, குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவை ஏமாற்றும் செயல்பாடே.
சுமந்திரன் யுத்தத்தின் போதும், அதற்குப் பின்னரும் பயங்கரவாதத் தடுப்பு சட்டத்திற்கு ஆதரவாக இருந்தமை ஒரு விசித்திரமான நடத்தையாகும். அவர் தனது கற்பனை தமிழ் எதிரிகளிடமிருந்து அவரைப் பாதுகாப்பதற்கு பயங்கரவாத தடுப்பு சட்டத்தைப் பயன்படுத்தினார். அவர் ஒரு சூழ்ச்சிப் பொய்யர் மற்றும் தமிழரை ஏமாற்றுபவர் என்பதை நாம் நிரூபிக்க முடியும்.
சர்வதேச விசாரணை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டதாகக் கூறிய அவர், இப்போது சர்வதேச விசாரணைக்கு ஐ. சி. சி. அழைப்பு விடுக்கும் என்று கூறுவதன் மூலம் அவர் ஒரு பெரிய பொய்யர் என்பதைக் காட்டுகிறார்.
போருக்குப் பின்னர், நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட அரசாங்கத்தில் சுமந்திரன் பயங்கரவாத தடுப்பு சட்டத்தைப் பயன்படுத்தி 25 தமிழர்களைக் கைது செய்தார். 30 தொடக்கம் 40 வரையிலான சிங்கள விசேட அதிரடிப் படையினரை தமிழ் எதிரிகளிடமிருந்து தன்னை பாதுகாக்க சுமந்திரன் பயன்படுத்தினார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அவர் எப்போதும் தமிழ் தேசியத்தை எதிர்க்கும் மக்களுக்கு உதவுகிறார். இதனால்தான் அவர் காங்கேசன்துறையிலிருந்து அம்பாந்தோட்டை வரை கையொப்பங்களை சேகரிப்பதற்காக ஒரு பெரிய சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். தனது அரசியலுக்காகவும், கொழும்பில் ஒரு தமிழனாக தனது பாதுகாப்பான வாழ்வுக்காகவும் சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் அவர் திருப்திப்படுத்துகிறார்.
சிங்களக் கொடூரச் சட்டத்திலிருந்து எம்மை விடுவிப்பதற்கும் எமது தாயகத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கும் இன்னும் பல தேவைகளுக்கும் தமிழ் இறையாண்மை வேண்டும். தமிழர்களுக்கு உதவ முன் வாருங்கள் என்று ஒவ்வொரு தமிழனும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை அழைக்க வேண்டும் என்றனர்.
46 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் 46 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் நோயாளர்கள் பலர் தமக்கான மருந்துகளை வெளியிடங்களில் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் சுமார் ஒன்றரை இலட்சம் மக்களுக்கும் இதேபோன்று முல்லைதீவு மாவட்டத்தின் ஒரு பகுதி மக்களுக்கும் சிகிச்சை வழங்கும் பிரதான வைத்தியசாலையாக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையே உள்ளது. இந்நிலையில், இங்கு பல்வேறு மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.
குறிப்பாக, சிறுவர்களுக்கான பாணி மருந்துகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கான குறிப்பிட்ட சில மருந்துகள் இல்லாத நிலை உள்ளது.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கின்ற வைத்தியசாலைகளில் காணப்படுகின்ற மருந்து தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் கொடையாளர்களின் உதவியுடன் சில மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டு விநியோகிக்கப்படுவதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொள்ளையர்களின் கைவரிசை
ஞாயிறு (25) அதிகாலை வேளை வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் 25 பவுண் நகைகள், 4 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கிளிநொச்சி - திருவையாறு 2ஆம் பகுதியில் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் என்பவரின் வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் அறிய வருவதாவது,
ஞாயிறு அதிகாலை அவரின் வீட்டுக்கு சென்றவர்கள், வீட்டிலிருந்த மூவரின் பெயர்களைக் கூறி அழைத்துள்ளனர். இதனையடுத்து வீட்டில் இருந்த முதியவர் சென்று கேற்றை திறந்தபோது அவரைத் தாக்கி வீட்டினுள்ளே இழுத்துச் சென்றார்கள்.
தொடர்ந்து வீட்டிலிருந்த மனைவியையும் தாக்கிய கொள்ளையளர்கள் இருவரையும் கட்டிப்போட்டுவிட்டு பணம் நகை எங்கே உள்ளது என்று கேட்டுள்ளனர்.
இதன்போது வீட்டிலிருந்த பெண் தான் அணிந்திருந்த நகைகளை கழற்றிக் கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து தாலிக் கொடி எங்கே என்று கேட்டு இருவரையும் தாக்கியுள்ளனர்.
தாலிக்கொடி இல்லை எனத் தெரிவித்தபோது “பகல் கலியாண வீட்டுக்கு சென்றுவரும்போது போட்டிருந்தாய்... எங்கே”, எனக் கேட்டு அந்தப் பெண்ணைத் தாக்கியுள்ளனர்.
இதன் பின்பு வீடு முழுவதும் தேடுதல் நடத்தியவர்கள் தாலிக்கொடி உள்ளிட்ட ஏனைய நங்க நகைகள் மற்றும் பணம் 4 இலட்சம் ரூபாயையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றனர். அத்துடன், அவர்களிடமிருந்த கைபேசியையும் பறித்தவர்கள் வீட்டு உரிமையாளரின் மோட்டார் சைக்கிளையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர் என்று அறிய வருகின்றது.
கொள்ளையரின் தாக்குதலில் காயமடைந்த வீட்டு உரிமையாளர் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
ஹெரோயினை வாங்க கர்ப்பத்தைத் தாங்கிய சிறுமி
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், ஹெரோயினுக்கு அடிமையான 17 வயதுச் சிறுமியொருவர் ஞாயிறு (25) அன்று மறுவாழ்வு நிலையத்துக்கு அனுப்பப்பட்டார்.
அவர் 8 மாதங்கள் கர்ப்பமாகவுள்ளார் என்றும் மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஹெரோயினைப் பெறுவதற்காக பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்டதாலேயே கர்ப்பம் தரித்தார் என்று மறுவாழ்வு நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சிறுமியின் தாயார் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அந்தச் சிறுமி மறு வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்று மேலும் தெரிய வந்தது
வடக்கு – கிழக்கில் போதைப் பொருளுக்கடிமையானவர்களுக்கா சிகிச்சை மையங்கள் வேண்டும் - அஜந்தன் சியாமினி
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்காக சிகிச்சை மையங்கள் வடக்கு – கிழக்கில் இல்லை. இந்தக் குறை உடனடியாக நிவர்த்தி செய்யப்படவேண்டும். இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அண்மையில் இடம்பெற்ற போதைப் பொருளுக்கு எதிரான கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேசிய அபாயகர ஒளடதங்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட இணைப்பாளர் அஜந்தன் சியாமினி இது தொடர்பில் மேலும் தெரிவித்தவை வருமாறு,
போதைப்பொருளுக்கு அடிமையாகிய 21 வயதுக்கு உட்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்கு கண்டியிலும், 21 தொடக் கம் 32 வயதுக்கு இடைப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்கு கம்பஹாவிலும், 32 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்கு காலியிலும் சிகிச்சை மறுவாழ்வு மையங்கள் உள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இவ்வாறான சிகிச்சை மறுவாழ்வு மையங்கள் இல்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் போதைப் பொருளுக்கு எதிரான சிகிச்சை மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படவேண்டும் என்றார்.
யாழ்ப்பாணத்தில் கிழமைக்கு 30 மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் சராசரியாக 30 மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில், சாவகச்சேரியில் இடம்பெறுகின்ற உளவள நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகின்றனர். இவர்களில் உயிர்கொல்லிப் போதைப்பொருளான ஹெரோய்னுக்கு அடிமையானவர்களும் உள்ளடங்குகின்றனர் என்று தேசிய அபாயகர ஒளடதங்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட இணைப்பாளர் அஜந்தன் சியா மினி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு;
பாடசாலை மட்டங்களிலிருந்தே போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் போதைக்கு எதிரான செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அந்தவகையில் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவில் இருந்தும் இரண்டு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்து தற்பொழுது பயிற்சிகளை வழங்கி வருகின்றோம்.
கிராம மட்டங்கள் ரீதியாகவும் பாடசாலைகளை மையப்படுத்தியதாகவே இந்தச் செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில், தென்மராட்சி கல்வி வலயத்தில் 53 அதிபர்கள் மற்றும் 57 உளவளத் துணை ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தச் செயல்திட்டத்தை அடுத்து, பல அதிபர்கள், ஆசிரியர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் மாணவர்களை சிகிச்சைக்காக ஒப்படைத்து வருகின்றார்கள் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY