
posted 18th September 2022
மாபெரும் மாவட்ட தொழிற் சந்தை மன்னாரில்
( வாஸ் கூஞ்ஞ) 17.09.2022
மன்னார் மாவட்த்தின் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் தொழில் நிலையத்தினால் மன்னார் மாவட்டத்தில் மாபெரும் மாவட்ட தொழிற் சந்தை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத் தொழிற் சந்தையானது மன்னார் நகர சபை மண்டபத்தில் எதிர்வரும் புதன்கிழமை (21.09.2022) முற்பகல் 9 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தொழிற் சந்தையில் பல தொழில் வழங்கும் நிறுவனங்கள் 150 க்கு மேற்பட்ட தொழில் வாய்ப்புக்களுடன் இந் நிகழ்வு இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் இருவர் மரணம்
எஸ் தில்லைநாதன் (17.09.2022)
இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை (17) இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 16,744 ஆக பதிவாகியுள்ளது
ஆளுநரின் வாக்குறுதியை ஏற்று கைவிடப்பட்ட உண்ணாவிரதம்
எஸ் தில்லைநாதன் (17.09.2022)
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் கைதிகள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் வாக்குறுதிக்கமைய உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் தெரிவித்தனர்.
வடமாகாண ஆளுநர் இன்று கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளை சந்தித்து கலந்துரையாடி விரைவில் விடுதலைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தெரிவித்ததைத் தொடர்ந்து கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்ததுடன் தங்களுடைய போராட்டத்தையும் கைவிடுவதாக தெரிவித்தனர் .
ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொலைபேசி வாயிலாக உண்ணாவிரதம் இருக்கும் சிறைக்கைதிகளுடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் கைதிகளினுடைய உறவினர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக வெள்ளிக்கிழமை (16) காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வடமாகாண ஆளுநரின் வாக்குறுதிக்கமைய சனிக்கிழமை (17) மதியம் போராட்டம் கைவிடப்பட்டது.
கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதிகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 12 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் செப்டம்பர் 06ம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அவர்களுக்கு ஆதரவாக இளைஞர்களினுடைய உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல்நிலை மோசமாவதை கருத்திற்கொண்டு தகுந்த வாக்குறுதியை அவர்களுக்கு வழங்கி உணவுத் தவிர்ப்பை முடிவுறுத்தி, பிணையிலோ, பொதுமன்னிப்பிலோ விடுதலை செய்யுமாறு உறவினர்கள் வேண்டுகோள் விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
”மாவீரர்களின் தியாகங்களில் அரசியல் இலாபம் தேட வேண்டாம்"
எஸ் தில்லைநாதன் (18.09.2022)
"மாவீரர்களின் தியாகங்களில் அரசியல் இலாபம் தேட வேண்டாம்" என்று 'பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை' மக்கள் பேரெழுச்சி இயக்கம் நேற்று சனிக் கிழமை (18) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
"தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் மிக முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய அகிம்சைப் போராட்டத்தின் உச்சத்தினை தொட்டவர் தியாகி திலீபன். பன்னிரெண்டு நாட்களாக நீர், ஆகாரம் எதுவுமின்றி தன்னையே உருக்கி தமிழ் இனத்தின் விடுதலை தீயை ஏற்றி வைத்தவர் காந்திய தேசத்திற்கே அகிம்சையை போதித்த தலைமகன்.
இவ்வாறாக தியாகத்தின் சிகரமான திலீபன் அவர்களின் 35 ஆவது ஆண்டு நினைவு நாட்களின் ஆரம்ப தினமான 15.09.2022 அன்றும், அதற்கு முன்பாக நடைபெற்ற ஒழுங்குபடுத்தல் நிகழ்வுகளின் போதும் இடம்பெற்ற கட்சி அரசியல் ரீதியான முறுகல் நிலை, தமிழ் தேசியத்தின்பால் பற்றுறுதி கொண்ட அனைவருக்கும் அதிர்ச்சியையும், கவலையினையும் ஏற்படுத்தியுள்ளது.
தியாகி திலீபன் அறப்போரினை நடத்தி ஆகுதியான நல்லூர் மண்ணிலேயே இச்சம்பவங்கள் நடைபெற்றது மிக வேதனை அளிப்பதாக உள்ளது. அளவிட முடியாத தியாகத்தினை எவருமே தமது வாக்கு அரசியலுக்கு பயன்படுத்துவதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
அத்துடன் நினைவு நிகழ்வின் போது ஒரு மாவீரரின் தந்தையும், தியாகி திலீபனின் உண்ணாவிரதப் போராட்டத்தில் கூட இருந்தவரும், நீண்ட நெடிய போராட்ட வரலாற்றைக் கொண்ட மூத்த போராளியுமான ஒருவர் அவமதிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஒரு மாவீரரின் வணக்க நிகழ்வில் இன்னொரு மூத்த போராளியை அவமதிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
35 வருடங்கள் கடந்தும் தியாகி திலீபனின் கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில், எமது உரிமைகளை இழந்து, எமது நிலங்கள் எங்கள் எதிரியினால் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்படும் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் உள்ளோம். தமிழினமே ஓரணியாக அணிதிரண்டு போராடவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம்.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான பொதுக்கட்டமைப்பு தொடர்பான முன்னெடுப்புகள் நடைபெறுவதாக அறிகின்றோம். ஆயினும், நாம் மேலே குறிப்பிட்டது போல் நினைவெழுச்சி நிகழ்வுகள், அதற்கான பொதுக்கட்டமைப்பு என்பன கட்சி அரசியலை கடந்து பொது சமூகமாகிய மாவீரர்களின் பெற்றோர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர்கள், மத தலைவர்கள், புத்திஜீவிகள், மாணவர்கள், சிவில் சமூகத்தினர், பொது மக்கள் அடங்கியவர்களின் முன்னெடுப்பிலேயே கட்டமைக்கப்பட வேண்டும்." என்றுள்ளது.
கசிப்பு காய்ச்சியவர் கைது
எஸ் தில்லைநாதன் (18.09.2022)
கசிப்பு காய்ச்சிய ஒருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் நேற்று ஞாயிற்றுக் கிழமை (18) கைது செய்தனர். அவரிடமிருந்து 50 லீற்றர் கோடா, 8 லீற்றர் கசிப்பு, 3 வாள்கள் என்பவை கைப்பற்றப்பட்டன.
ஆனைக்கோட்டை - ஆறுகால்மடத்தில் நீண்டநாட்களாக கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த நடவடிக்கையில் 38 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து, 50 லீற்றர் கோடா, 8 லீற்றர் கசிப்பு, 3 வாள்கள் மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.
விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
யாழில் 20 கிராமங்களில் போதைப்பொருள் பாவனையில் - 10 பேர் உயிரிழந்துள்ளனர்
எஸ் தில்லைநாதன் (18.09.2022)
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உயிர்கொல்லிப் போதைப்பொருளான ஹெரோயின் பயன்படுத்திய 10 பேர் இதுவரை உயிரிழந்தனர். இதற்கு அடிமையான 320 பேர் வரையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் யாழ். போதனா மருத்துவமனையில் ஹெரோயினுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையம் திறக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் 134 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், யாழ். மாவட்டத்தில் 20 கிராமங்களைச் சேர்ந்த பலரும் ஹெரோயின் பாவனைக்கு முற்றாக அடிமையாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
ஹெரோயினுக்கு அடிமையானவர்களில் அதிகமானோர் 18 – 23 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்பதுடன், யாழ். நகரிலுள்ள பிரபல பாடசாலைகளின் மாணவர்களும் இதற்குப் அடிமையாகியுள்ளனர் என்றும் அறிய வருகின்றது.
கொரோனா, பொருளாதார நெருக்கடி எனப் பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் யாழ். குடாநாட்டில் உயிர் கொல்லிப் போதைப்பொருளான ஹெரோயின் பயன்பாடு பல்கிப் பெருகியுள்ளது.
கொழும்பிலிருந்து தொடர்ச்சியாக உயிர்கொல்லி ஹெரோயின் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு வரப்படுகின்றது. இங்குள்ள பல நூற்றுக்கணக்கான முகவர்கள் ஊடாக அவை குடாநாட்டின் சகல பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படுகின்றன.
உயிர்கொல்லி ஹெரோயினை ஊசி மூலமே அதிகளவானோர் பயன்படுத்துகின்றனர். ஒரு நாளைக்கு 30 மில்லி கிராம் தொடக்கம் 300 மில்லி கிராம் வரையில் நுகர்கின்றனர்.
18 – 23 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களே உயிர்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினை அதிகளவில் நுகர்கின்றனர். இதனைத் தவிர பாடசாலை மாணவர்களும் நுகர்கின்றனர்.
ஹெரோயின் நுகரும் பெரும்பாலான இளைஞர்களின் பெற்றோர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து தாமே தமது பிள்ளைகளை பொலிஸில் ஒப்படைக்கின்ற சம்பவங்களும் இடம்பெறுகின்றன. சில பெற்றோர் மருத்துவமனைகளிலும் தமது பிள்ளைகளை ஒப்படைத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஹெரோயின் பாவனைக்கு அடிமையான சுமார் 320 பேர் வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். உயிர்கொல்லி ஹெரோயினுக்கு அடிமையானமையால் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைதானவர்களும் இதற்குள் உள்ளடங்குகின்றனர்.
உயிர் கொல்லி போதையான ஹெரோயின் பாவனைக்கு அடிமையானவர்கள் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துச் செல்வதால், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் விசேட சிகிச்சைப் பிரிவு இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு இதுவரை 134 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் சுமார் 20 கிராமங்கள் ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்களின் கூடாரமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தக் கிராமங்களிலுள்ள இளைஞர்களில் அநேகர் இதனைப் பயன்படுத்துகின்றமையும் பல்வேறு தரப்புக்கள் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் அதிகரித்துச் செல்லும் இந்தப் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூகத்தினர் முன்வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரயில் பாதையில் அமர்ந்திருந்தவர் ரயில் மோதி ஸ்தலத்திலேயே மரணம்
எஸ் தில்லைநாதன் (18.09.2022)
ரயில் பாதையில் அமர்ந்திருந்தவர் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை (17) இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான எஸ். நகுலன் என்பவரே மரணமடைந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் இரவு 10 மணியளவில் ஓமந்தை, விளக்குவைத்தகுளம் பகுதியில் பயணித்த போது ரயில் பாதையில் இருந்தவரை மோதி தள்ளியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அந்த குடும்பஸ்தர் மரணமானார்.
சடலம் புகையிரத திணைக்கள உத்தியோகத்தர்களால் மீட்கப்பட்டு, வவுனியா புகையிரத நிலையத்தில் வைத்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொலிஸார் சடலத்தை வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)