
posted 15th September 2022
திவிஸ்னா வர்த்தக நிலையத்தில் கொள்ளை
எஸ் தில்லைநாதன்
யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள திவிஸ்னா வர்த்தகநிலையத்தில் நேற்று நள்ளிரவு (14) கொள்ளை இடம்பெற்றுள்ளது.
குறித்த கொள்ளை சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது;
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள திவிஸ்னா வர்த்தக நிலையமொன்றில் நேற்று நள்ளிரவு (14) இனந்தெரியாத கொள்ளை கும்பல் கடை முன் வாயில் வழியாக பூட்டை உடைத்து மர்மமான முறையில் கடைக்குள் புகுந்து ஐந்து இலட்சம் பெறுமதியான அரிசி மூட்டை,பால்மா பெட்டி வகைகள்,கோதுமை மா, எண்ணெய், பிஸ்கட் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளது.
மேலும் குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வர்த்தக நிலைய உரிமையாளர் ராசு உதயராசா கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதை அடுத்து கோப்பாய் பொலிஸார் கொள்ளை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
துரிதப்படுத்தப்படும் யாழ். மாநகர சபையின் புதிய கட்டடத் தொகுதி
எஸ் தில்லைநாதன்
உள்நாட்டு யுத்தத்தால் அழிக்கப்பட்ட யாழ். மாநகர சபையின் புதிய கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பை துரிதப்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு யாழ். மாநகர சபை பிரதி முதல்வர் து. ஈசன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், உள்நாட்டு யுத்தம் காரணமாக அழிக்கப்பட்ட யாழ். மாநகர சபைக்கான புதிய கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கு அரசாங்கத்தால் ஏற்கப்பட்ட பொறுப்பையும், முன்முயற்சியையும் நான் நேர்மையுடன் வரவேற்கின்றேன். தங்களுடைய உன்னத முயற்சிக்காக தங்களுக்கு மிகவும் நன்றி தெரிவிக்கின்றேன்.
சபையின் புதிய கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தாங்கள் பிரதமராக இருந்த போது தங்களுடைய ஆதரவில் மாநகர சபையின் முன்னாள் முதல்வரின் பங்குபற்றலோடு 07.07.2019 அன்று நடைபெற்றது.
நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதியில் புதிய கட்டடத் தொகுதியை கட்டி முடிப்பதற்கு 2,350 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. எவ்வாறாயினும் தங்களுடைய முயற்சியின் விளைவாக இந்தத் திட்டத்துக்கு மாநகர சபைக்கு 800 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் தங்களுடைய சளைக்காத முயற்சியை நான் பாராட்டுகின்றேன்.
தற்போது முன்னெப்போதும் ஏற்படாத அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக திட்டத்தை பூர்த்தி செய்வதற்கான முயற்சி தடைப்பட்டிருக்கிறது. எனவே, தற்போதைய கட்டட மூலப்பொருள் விலையேற்றத்துக்கு அமைவாக நிதி ஒதுக்கீடு செய்தல் மிகவும் அவசியமானதாகும்.
உண்மையில் மாநகர சபைக் கட்டடம் ஆயுதப் போர் காரணமாக அழிக்கப்பட்டிருந்தது. அப்போதிலிருந்து நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.
அது தவிர, யாழ். மாநகர சபை நிர்வாகத்துக்கு நிரந்தரமான கட்டடத் தொகுதியை கொண்டிருப்பது உள்ளூர் பொருளாதாரத்தில் உள்ளூர் சமூகத்தின் பங்களிப்பை உருவாக்கும் வாய்ப்புக்களை உருவாக்குகிறது. இதேநேரம் ஒரே கூரையின் கீழ் யாழ் மாநகர சபையின் பொது மக்களுக்கான சேவைகளை மிகச்சிறந்த முறையில் வழங்கும் வாய்ப்பை விரிவுப்படுத்துகிறது.
மேற்கூறியவாறு இந்தத் திட்டத்தின் விருத்தியிலும் பூர்த்தி செய்வதிலும் மிக்க கூடிய விரைவில் தங்களது விசேட கவனத்தை செலுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன், என்றுள்ளது.
மண்ணெண்ணை விற்பனையில் கைது
எஸ் தில்லைநாதன்
பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெரு பகுதியில் 380 லீற்றர் மண்ணெண்ணெயை விற்பனை செய்தவரும் அதனை வாங்கிய நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் பகுதியில், புதன்கிழமை (14) பிற்பகல் அதிக விலைக்கு மண்ணெண்ணெய் விற்பனை இடம் பெறுவதாக பருத்திதுறை பொலிஸ் நிலைய விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்தது. இந்த அடிப்படையில், பருத்தித்துறை இரண்டாம் குறுக்குத் தெரு விசேட புலனாய்வுப் பிரிவினரால் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது 380 லீற்றர் மண்ணெண்ணெயை 800 ரூபாய் வீதம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ஒருவரும் அதனை வாங்கிய நாவற்குழி பகுதியை சேர்ந்த ஒருவருமாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)