பலவகைச் செய்தித் துணுக்குகள்

கோதுமை மாவு சதொசவுக்கு வந்ததும் மக்கள் கொள்முதல் செய்வதில் ஆர்வம்

( வாஸ் கூஞ்ஞ) 14.09.2022

மன்னார் பகுதியில் தற்பொழுது சதொச கிளைகளில் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்ட நிலையில் விற்பனை செய்யப்படுவதால் பலர் கோதுமை மாவை கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருந்தபோதும், மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.

அண்மைகாலமாக மன்னார் பகுதியில் கோதுமை மாவு தட்டுப்பாடு நிலவி வந்தபோதும், வெளி சந்தைகளில் ஒரு கிலோ 400 ரூபாவுக்கு மேலாகவே விற்பனை செய்யப்பட்டு வந்ததாக நுகர்வோர் தெரிவித்தனர்.

ஆனால், தற்பொழுது சதொசவுக்கு கோதுமை மாவு வந்திறங்கியதுடன் ஒரு கிலோ மா 310 ரூபா வீதம் விற்பனை செய்யப்படுவதால் பலர் கியூ வரிசையில் நின்று மாவை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதேவேளையில் மன்னார் பகுதி சதொச கிளைகளில் ஒரு நபருக்கு மூன்று கிலோ கோதுமைமா வீதமே வழங்கப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டபோதும் மன்னார் பகுதியில் ஒரு இறாத்தல் பாண் 200 ரூபாவுக்கே தற்பொழுது தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆனால், பிறிமா மாவு பேக்கறிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றபோதும் பேக்கறிகளுக்கு போதியளவு மாவு விநியோகம் செய்யப்படுவதில்லையென பேக்கறி உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இருந்தபோதும், இவர்கள் வெளிச் சந்தையில் ஒரு கிலோ கோதுமை மா 410 ரூபா தொடக்கம் 420 ரூபா வரைக்கும் வாங்கியே பேக்கறிகளில் பாண் உற்பத்தி செய்து ஒரு இறாத்தல் 200 ரூபாவுக்கே விற்பனை செய்து வருவதாகவும் பேக்கறி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.



பெருந்தோட்ட பகுதியில் சதொச கிளைகளில் உணவு பொருட்கள் தாராளமாக பெறுவதற்கு நடவடிக்கை

(வாஸ் கூஞ்ஞ) 14.09.2022

கடந்த சில வாரங்களாக ஹட்டன் உள்ளிட்ட பெருந்தோட்டத்தின் முக்கிய நகரங்களில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவி வந்தபோதும் தற்பொழுது விலை குறைக்கப்பட்ட நிலையில் போதிய கோதுமை மாவை பெற்றுக்கொள்ள முடிகின்றது என அங்குள்ள நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில வாரங்களாக ஹட்டன் உள்ளிட்ட பெருந்தோட்டத்தின் முக்கிய நகரங்களில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்ததால் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

ஆனால், தற்பொழுது ஹட்டன் சதொச கிளைக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு கோதுமை மாவு மற்றும் ஏனைய உணவுப் பொருட்களை வரம்பில்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி ஒரு கிலோ ரூ.185, நாட்டு அரிசி ரூ.194, லங்கா வெள்ளை அரிசி ரூ.210, லங்கா நாடு ரூ.218, சிவப்பு அரிசி ரூ.210, பொன்னி சம்பா ரூ.194, சீனி ரூ.310, வெள்ளை சீனி ரூ.279, சிவப்பு பருப்பு ரூ.429, நுவரெலியா உருளைக்கிழங்கு ரூ.398, வெங்காயம் ரூ.175, நெத்தலி ரூ.1350 என்ற விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

சதொசவில் கோதுமை மாவு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வரம்பற்ற முறையில் விற்பனையாவதால், நாளாந்தம் அதிகளவான வாடிக்கையாளர்கள் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய வருவதாக சதொச கிளையின் கட்டுப்பாட்டு அதிகார சபை வட்டாரம் தெரிவிக்கின்றது.



ஆளுநரின் பணிப்புரையில் பொதுமக்களின் தேவைகளுக்குப் பதிலளிக்கும் செயற்திட்டம். செயலாளர் வகீசன் தெரிவிப்பு.

(எஸ் தில்லைநாதன்)

வடமாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய, வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் தமது அவசரத் தேவைகளை அரசாங்கத்திடம் இருந்தும், அதிகாரிகளிடமிருந்தும் பதில்களை, உதவிகளை விரைவாகப் பெறுவதற்கான பெறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநரின் செயலாளர் பி. வாகீசன் தெரிவித்தார்.

பொதுமக்களின் அவசரத் தேவைகளுக்கான அவர்களின் அடையாளத்துடனான குரல்கள் ஆளுநரின் செயலகத்தாற் கேட்டறியப்படும்.

மன்னார், வவுனியா, மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள், அனைத்து கிராம சேவகர்களுக்கும் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும் இவ்விடயம் தொடர்பாகத் தெரிவித்தல் வேண்டும்.

முறைப்பாட்டாளர் ஆளுநர் செயலகத்துக்கு குரல் பதிவு மற்றும் மின்னஞ்சல் ஊடாக தகவல்களை பெறுவதற்கு ஆளுநர் செயலாளருடாக வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆளுநர் செயலகம், வட மாகாணம், பழைய பூங்கா சுண்டுக்குளி யாழ்ப்பாணம் ஆகிய முகவரிக்கு ஒவ்வொரு பிரதேச செயலகத்தினாலும் தபால் மூலம் அனுப்பப்படும் கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

அவசரத் தேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காகத் திட்டமிடப்பட்ட காலம் 2022ம் ஆண்டு புரட்டாதி 9 முதல் 29 வரை 3 வாரங்களாக அமையும்.

பொது மக்களிடமிருந்து பெறப்படும் தேவைகள் தொடர்பான சமர்ப்பிப்புக்கள் ஆளுநர் செயலகத்திற்கு செயற்படுத்தப்பட்டு நவம்பர் நடுப்பகுதி அல்லது அதற்கு முன்னராகவோ பதிலளிக்கப்படும்.

தேவை ஏற்படின் வடமாகாணசபை அதிகாரிகள் பொது மக்களைச் சந்திப்பார்கள்.

உள்ளுராட்சித் திணைக்களம் வட்டார மட்டத்திலான அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அந்தந்த வட்டாரங்களிலுள்ள பொதுமக்களுக்கு இம் முயற்சியைப் பற்றி மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொதுமக்களின் சமர்ப்பிப்புகளைச் சேகரிக்கும் போது பெறப்பட்ட தேவைகளின் உண்மைத் தன்மையைக் குறுக்குப் பரிசீலனை செய்யவும், ஈடுபடுத்தும் வடமாகாண சபையின் இம் மாவட்டங்களிலிருந்து பின்வரும் அதிகாரிகள் இம்முயற்சிக்குக் கைகொடுப்பார்கள்.

  • பொறியியலாளர் த. ராஜகோபு (தொடர்புக்கு 0773172093) மாவட்ட மட்ட ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர், வவுனியா.
  • பொறியியலாளர் ந. சுதாகரன் (தொடர்புக்கு 0777235566) மாவட்ட மட்ட ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர், முல்லைத்தீவு.

  • திரு. றொஹான் (தொடர்புக்கு 0718613399) மாவட்ட மட்ட ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர், மன்னார்.

பிரதேச செயலாளர்கள் தமது பிரதேச செயலகப் பகுதிகளில் மேற்கூறியவற்றைப் பரந்தளவில் விளம்பரப்படுத்தலை ஊக்குவித்தல் வேண்டும்.

இவ்விடயம் சம்பந்தமாக ஏதேனும் விபரம் தேவையாயின் தயவு செய்து;

திருமதி லாகினி நிருபராஜ், உதவிச் செயலாளர், வடமாகாண ஆளுநர் செயலகம் 021 222 0660 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.


காணிகளை இராணுவத்திற்கு வழங்க முயற்சிகளில் உண்மையில்லை - டக்ளஸ் தேவானந்தா

(எஸ் தில்லைநாதன்)

பளை பிரதேசத்தில் உள்ள எல்.எல்.ஆர்.சி. காணிகளை இராணுவத்திற்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதான செய்திகளில் உண்மையில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் மத்தியில் உணர்வு ரீதியான குழப்பங்களை ஏற்படுத்தி சுயலாப அரசியல் ஆதாயம் தேடும் தரப்புக்களினால் கட்டவிழ்த்து விடப்படுகின்ற இவ்வாறான செய்திகள் தொடர்பில் ஊடகங்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மேலும், சில ஊடகங்களில் வெளியான குறித்த செய்தி தொடர்பாக நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் வினவியபோது, துறைசார்ந்த அமைச்சர்களுக்கு இதுதொடர்பான எந்தவொரு திட்டங்களும் இல்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அத்துடன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பளைப் பிரதேசத்தில் அமைந்துள்ள காணி சீர்திருத்த ஆணைக் குழுவிற்கு சொந்தமான காணிகளை கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களை சேர்ந்த காணிகளற்ற மக்களுக்கும், காணாமல் போனவர்களின் நேரடி உறவினர்களில் காணிகள் அற்றவர்களுக்கும் வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

(எஸ் தில்லைநாதன்)

நாலு நாட்கள் வயதான சிசு பால் புரைக்கேறி மரணம்

தாய்ப் பால் புரைக்கேறியதில் பிறந்து நான்கு நாட்களேயான பெண் சிசு உயிரிழந்தது.

இந்தச் சம்பவம் திங்கள் (12) இரவு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது. இதில், மயிலிட்டி வடக்கு மயிலிட்டியை சேர்ந்த தம்பதியரின் சிசுவே இவ்வாறு தாய்ப் பால் புரைக்கேறி உயிரிழந்தது.

நேற்று முன்தினம் இரவு 8:45 மணியளவில் சிசுவுக்கு பால் கொடுத்த பின்னர் சிசுவை அவதானித்தபோது, சிசு அசைவற்று இருந்துள்ளது.

மருத்துவர்கள் பரிசோதித்தபோது சிசு உயிரிழந்தமை தெரியவந்தது. பிரேத பரிசோதனையில் பால் மூச்சுக் குழாயில் புகுந்து புரைக்கேறியமையால் உயிரிழந்ததற்கான காரணமெனக் கூறப்பட்டது.

சிசுவின் உயிரிழப்பு தொடர்பில் யாழ். போதனா மருத்துவமனையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.