
posted 10th September 2022
1500 கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டது
இலங்கைக்குசட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட 1500 கிலோ கிராம் மஞ்சளை இராணுவத்தினர் கைப்பற்றினர்.
சட்டவிரோதமான முறையில், இறக்குமதி செய்வதற்கு தடைசெய்யப்பட்ட ஒரு தொகை மஞ்சள் கடத்தப்படுவது தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த பொதிகள் மீட்கப்பட்டன.
36 பாரிய மூடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த மஞ்சளை இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று முன்தினம் கைப்பற்றினர்.
இதன்போது, பூநகரி வலைப்பாடு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
மீட்கப்பட்ட மஞ்சள் ஜெயபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கள்ளமாக மணல் ஏற்றி வந்தவர் வாகனத்துடன் கைது
உரிய அனுமதிகள் இன்றி மணல் ஏற்றி வந்த டிப்பர் சாரதியை கைது செய்துள்ள அச்சுவேலி பொலிஸார் டிப்பர் வாகனத்தையும் கைப்பற்றினர்.
பளைப் பகுதியில் இருந்து உரிய அனுமதிகள் இன்றி, சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றியவாறு டிப்பர் வாகனம் ஒன்று வருவதாக புதன்கிழமை (07) அச்சுவேலி பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பிரகாரம் வீதி சோதனை நடவடிக்கைளில் அச்சுவேலி பொலிஸார் ஈடுபட்டிருந்தவேளை அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தை வழிமறித்து சாரதியை கைது செய்ததுடன், மணலுடன் வாகனத்தையும் கைப்பற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள சாரதி புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஊதுபத்தி வியாபாரத்தில் சிறார்கள்
யாழ்ப்பாணம் ஐந்துச் சந்திப் பகுதியில் தனியார் விடுதி ஒன்றை நடத்தி, அங்கு வயதுக்கு குறைந்த சிறுவர்களைப் பணிக்கு அமர்த்தி, யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் ஊதுபத்தி விற்பனையில் ஈடுபடச் செய்த காரணமாக இருந்த விடுதி வியாழனன்று (08) சீல் வைத்து இழுத்து மூடப்பட்டது.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிவான் ஆனந்தராஜா இந்த உத்தரவை பிறப்பித்தார்.
புத்தளம் பகுதியில் இருந்து சிறுவர்களை அழைத்து வந்து அவர்களிடம் ஊதுபத்திகளை வழங்கி விற்பனையில் ஈடுபடுத்தியதாக பூட்டுக் கடை நாதன் என்பவருக்கு சொந்தமான நாதன் விடுதியே வியாழனன்று சீல் வைத்து மூடப்பட்டது.
யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கடந்த மாதம் குறித்த விடுதியில் இருந்து ஏழு சிறு பெண் பிள்ளைகள், மூன்று ஆண் பிள்ளைகள் உட்பட 11 பேர் யாழ்ப்பாணம் சிறுவர் பிரிவு பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தனர்.
இது தொடர்பான வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதவான் குறித்த விடுதியினை சீல் வைத்து மூடுமாறு நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கு கட்டளை பிறப்பித்தார்.

மரத்திலிருந்து வீழ்ந்த குடும்பஸ்தர் மரணத்தைத் தழுவிக் கொண்டார்
யாழ்ப்பாணம்.இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதி, மாதகல் பகுதியில் வசித்துவந்த குடும்பஸ்தர் ஒருவர் வியாழன் (08) மாலை 5 மணியளவில் மரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் மரத்தில் இருந்த கொப்புகளை வெட்டுவதற்காக ஏறியவேளையே மரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு நோயாளர் காவு வண்டியை அழைத்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டது.
பாக்கியநாதன் ஜோசப் இமானுவேல் (வயது 66) என்ன நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிவேகத்தில் சென்றதால் பட்டதாரி மரணம்
யாழ்ப்பாணம் பலாலி வீதியில் கந்தர்மடம் பகுதிக்கு அருகே இடம்பெற்ற விபத்தில் மோட்டார் வண்டியில் பயணித்த இளைஞரொருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
கிருஷ்ணகுமார் சரவணபவன் என்கிற 32 வயதான பட்டதாரி இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
வியாழனன்று (08) இரவு 9.40 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து திருநெல்வேலி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றவரே கந்தர்மடம் பகுதி அருகே உள்ள மரத்துடன் மோதுண்டு மயக்கமுற்றார்.
உடனடியாகவே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் உயிரிழந்தார்.
உயிரிழப்புக்கு அதிவேகமாக மோட்டார் வாகனத்தை செலுத்தியமையே காரணம் என சட்ட மருத்துவ அதிகாரி நமவசிவாயம் பிறேம்குமார் தெரிவித்தார்.
ஆலயத்துக்குள் வாள்வெட்டும் கைகலப்பும் - மூவர் வைத்தியசாலையில்
வவுனியா - பொன்னாவரசன்குளம் பகுதியில் ஆலயம் ஒன்றின் திருவிழாவின்போது ஆலயத்துக்குள் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் அடிதடி காரணமாக மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா, பொன்னாவரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றில் கடந்த 10 தினங்களாக வருடாந்த திருவிழா நடைபெற்று வருகின்றது.
நேற்று முன் தினம் (07) மாலை திருவிழாவின்போது ஆலயத்தில் நின்ற சிலருக்கும், ஆலயப் பகுதிக்கு வந்த பிறிதொரு குழுவினருக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக மறுநாள் ஆலயத்தில் கொடி இறக்குவதற்கான பூசைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த குழுவினருக்கும், ஆலயத்தில் நின்றவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதுடன், வாள் வெட்டுத் தாக்குதல்களும் இடம்பெற்றன.
இச் சம்பவத்தில் காயமடைந்த 3 பேர் வவுனியா வைத்தியசாலையல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆலய நிர்வாகத்தினர் உட்பட ஆண்கள், பெண்கள் உள்ளடங்கலாக 20 பேர் வரையில் நெளுக்குளம் பொலிஸாரால் கொண்டு செல்லப்பட்டு அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ஆலயத் தலைவரை விடுவித்த பின்னரே கொடி இறக்கப்படும் எனத் தெரிவித்து அப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முன் திரண்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)