பலவகைச் செய்தித் துணுக்குகள்
பலவகைச் செய்தித் துணுக்குகள்

மீண்டும் போராட்டமா?
"அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான எதிர்பார்ப்பு இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், மீண்டும் தமது விடுதலைக்கான போராட்டத்தை ஆரம்பிக்கும் வாய்ப்பே உள்ளது" என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்காக போராடும் தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா. சக்திவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

"விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கம் என்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு வெலிக்கடை மற்றும் மகசின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்கள் தாம் கைது செய்யப்பட்ட நாட்களில் இருந்து இன்று வரை நீதிமன்றத்துக்கு அழைக்காதிருக்கின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நியாயம் கோரியும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர்.

இந்த விடயத்தில் அரசும், நீதி அமைச்சும் கவனம் செலுத்தி இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு நியாயத்தை நிலைநாட்டுமாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு அவசர வேண்டுகோளை விடுகின்றது.

சர்வதேசத்தை நம்ப வைப்பதற்காகவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளை விடுவிக்கின்றோம் என்று வெளி உலகத்துக்குக் காட்டவும் கடந்த இரண்டு, மூன்று வருடங்களில் புலி உருவாக்கும் எனக் கைது செய்யப்பட்டவர்களில் ஒருசிலரை ஆட்சியாளர்கள் பிணையில் விடுவித்தனர்.

இந்நிலையில், இவர்கள் தமக்கு நியாயம் வேண்டியும், ஒட்டுமொத்த அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருப்பது குடும்பத்தாரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அவர்களை உணவு தவிப்புப் போராட்டத்தில் இருந்து மீட்குமாறும், உடல் நிலையைக் கவனத்தில் கொண்டு விடுதலையை வலியுறுத்துமாறும் கேட்கின்றனர்.

அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பி அத்தகைய போராட்டங்கள் கைவிடப்பட்டாலும், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான எதிர்பார்ப்பு இன்றுவரை நிலைநாட்டப்படவில்லை. இந்நிலையில், அவர்களும் மீண்டும் தமது விடுதலைக்கான போராட்டத்தை ஆரம்பிக்கும் வாய்ப்பே உள்ளது.

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவிருக்கும் காலகட்டத்தில் மிக அண்மையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சிலரை பிணையில் அனுப்பிவிட்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக அரசு நாடகமாடும் வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் தமிழ் அரசியல் தலைமைத்துவங்கள் இதனைக் கருத்தில்கொண்டு உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு அழுத்தம் கொடுப்பதோடு, ஒட்டுமொத்த அரசியல் கைதிகளும் விடுதலையாவதற்கு கூட்டுச் செயல்பாட்டை முதன்மைப்படுத்துமாறு அரசியல் கைதிகளின் பெற்றோரோடு அரசியல் கைதிகளின் தேசிய அமைப்பும் கேட்டுகொள்கின்றது" என்றுள்ளது.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

இலங்கைக்கு வருவோருக்கு காணி தரநடவடிக்கை - வடமாகாண ஆளுநர்

இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பும் வட மாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரச காணிகளை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணிபுப்புரை விடுத்துள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக தமிழ்நாட்டில் தற்போது சுமார் 58 ஆயிரம் மக்கள் அகதிகளாக வசிக்கின்றனர். இவர்களில், சுமார் 3ஆயிரம் பேர் மீள இலங்கைக்கு திரும்பவுள்ளனர்.

ஏற்கனவே ஒரு பகுதியினர் இலங்கை திரும்பியுள்ள நிலையில் படிப்படியாக தாய்நாட்டுக்கு வருகை தருபவர்களுக்கு சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

வருகை தரும் குடும்பங்களில் காணி அற்றவர்களுக்கு அரச நிலம் பகிர்ந்தளிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்தியாவிலிருந்து வருகை தரும் இலங்கை மக்களுக்கு இந்திய அரசு வழங்கும் வீட்டுத் திட்டத்தின் நிதியை அதிகரிக்குமாறு இந்திய அரசை கேட்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ்நாட்டில் உள்ள இந்தியாவுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரனுக்கு இந்த விடயம் மின்னஞ்சல் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், இந்தியாவிலிருந்து திரும்பவுள்ள 3024 குடும்பங்களுக்கு 1,163 ஏக்கர் காணிகளை வழங்க முடியும் என்று வடக்கு மாகாண காணி ஆணையாளர் சோதிநாதன் கடிதம் மூலம் ஆளுநருக்கும், பிரதம செயலாளருக்கும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா விதிமுறைகள்

வரலாற்றுப் பிரசித்திபெற்ற வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

ஒக்ரோபர் 1ஆம் திகதி குருக்கட்டு விநாயகர் தரிசனமும் மறுநாளான 2ஆம் திகதி வெண்ணைத் திருவிழாவும், அடுத்தநாள் 3ஆம் திகதி துகில் திருவிழாவும், 4ஆம் திகதி பாம்பு திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

கம்சன் போர்த் திருவிழா ஒக்ரோபர் 5ஆம் திகதி நடைபெறும். 7ஆம் திகதி சப்பை ரதத் திருவிழாவும் மறுநாள், 8ஆம் திகதி தேர்த்திருவிழா, அடுத்தநாள் 9ஆம் திகதி சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.

10 ஆம் திகதி காலையில் கேணி தீர்த்தத் திருவிழாவும் அன்று மாலை கொடியிறக்கமும் நடைபெறவுள்ளது.

பெருந்திருவிழாவை சுகாதார விதிகளின்படி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

சுகாதார நடைமுறைகளை பின்பற்றுதல் அவசியமானதாக கருதப்படுகின்றது.

  • பக்தர்கள் ஆசார சீலர்களாக ஆலயத்திற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
  • ஆலய சுற்றாடலில் உணவு கையாளும் நிலையங்கள் அமைப்பவர்கள் நாட்டின் எப்பாகத்திலாவது பதிவு செய்யப்பட்ட உணவுச் சாலைகள் நடத்துபவர்களாக இருத்தல் வேண்டும்.

  • சகல உணவு கையாள்பவர்களும் தாங்கள் பணிபுரியும் பதிவு செய்யப்பட்ட உணவுச்சாலை அமைந்துள்ள பிரதேசத்துக்கான சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையிலிருந்து பெறப்பட்ட மருத்துவச்சான்றிதழ் பெற்றிருப்பதுடன், அதனை தங்களுடன் வைத்திருத்தல் வேண்டும் (ஐஸ்கிறீம் கடைகள் உள்ளடங்கலாக).

  • பொதுச் சுகாதார பரிசோதகரின் கண்காணிப்புக்கு உட்பட்ட கிணறுகளிலிருந்து பெறப்படும் குடிநீரையே உபயோகத்தில் வேண்டும்.

  • ஆலயச்சுற்றாடலில் இனிப்புக் கடைகள், கச்சான் விற்பவர்கள் உற்பத்தியை மேற்கொள்ள முடியாது. விற்பனையை மட்டும் செய்யமுடியும் (கச்சான் வறுத்தல் இனிப்பு பண்டங்கள் தயாரித்தல்).

  • அன்னதான மடங்களில் கடமையாற்றுபவர்கள் மருத்துவ சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

  • சகல கடை உரிமையாளர்களும் ஒவ்வொரு நாளும் வரும் கழிவுகளை வெளியில் வீசாது ஒன்றாகச் சேர்த்து பிரதேச சபை வாகனத்தின் மூலம் அகற்றுதல் வேண்டும்.

  • பச்சை குத்துதல், காதுகுத்துதல் போன்ற செயல்பாடுகள் ஆலய ச்சுற்றாடலில் அனுமதிக்கப்படமாட்டாது.

  • போதைவஸ்துப் பொருட்கள், புகைத்தல் மதுபாவனைப் பாவனை, விற்பனை முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது, என்றுள்ளது.
பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)