பலவகைச் செய்தித் துணுக்குகள்

காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகள்

கிளிநொச்சி மாவட்டம், பளைப் பகுதியில் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணியில் இராணுவத்தினர் பண்ணை அமைக்க 1,840 ஏக்கர் நிலம் வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதலுக்குப் பத்திரம் நகர்கின்றது.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு பளைப் பகுதியில் தற்போது 4 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 1,840 ஏக்கர் நிலம் விவசாய அமைச்சின் கீழ் இயங்கிய மக்கள் பெருந்தோட்டச் சபைக்கு 1988 இல் வழங்கியதாக அந்தச் சபை உரிமை கோரி வருகின்றது.

பெருந்தோட்டச் சபைக்கு 1988 இல் 1,840 ஏக்கர் நிலம் வழங்கியதற்கான ஆவணமோ - சான்றுகளோ அந்தச் சபையிடமோ அல்லது ஆணைக்குழுவிடமோ இல்லாத சூழலிலும் சபை உரிமை கோரி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அந்தச் சபையின் பெயரில் நிலத்தை மாற்றி, இராணுவத்தினர் மூலம் அங்கு பெரும் பண்ணை அமைப்பதற்கு 1,840 ஏக்கரையும் சபையின் ஊடாக இராணுவத்தினருக்கு வழங்க எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதற்கான சகல ஏற்பாடுகளையும் விவசாய அமைச்சு மற்றும் காணி அமைச்சு என்பன இணைந்து முன்னெடுப்பது தற்போது தெரியவந்துள்ளது.



மாணவி கிருசாந்தியின் நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி குமாரசாமியின் நினைவேந்தல் நிகழ்வு நாளை புதன்கிழமை செம்மணியில் நடைபெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

எம். கே. சிவாஜிலிங்கம் தலைமையில் நாளை முற்பகல் 10 மணிக்கு இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது.

1996ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் மாணவி கிருசாந்தி, அவரின் தாயார், சகோதரர், அயலவர் ஆகியோர் செம்மணி காவலரணில் கொல்லப்பட்டு, புதைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



கொள்ளையன் கைது

கீரிமலையில் வீடொன்றை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட நபர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்தவர் எனவும், கைது செய்யப்பட்டவரிடமிருந்து களவாடப்பட்ட நகைகள் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

பிரான்ஸிலிருந்து வந்த மணமானவர் மோட்ட சைக்கிள் ஓடி உயிரிழந்தார்

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

தென்மராட்சி - இடைக்குறிச்சி - வரணியைச் சேர்ந்த ஆ. அருள்குமார் (வயது- 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது,

உயிரிழந்த நபர் தனது திருமணத்துக்காக பிரான்ஸிலிருந்து வந்திருந்தார். திருமணமாகி ஒரே மாதமான நிலையில் இன்னும் சில தினங்களில் அவர் பிரான்ஸூக்கு திரும்பவிருந்தார்.

இந்நிலையில், சனிக்கிழமை தேவையின் நிமித்தம் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். வீட்டிலிருந்து குறுகிய தூரமே சென்ற நிலையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த அவர் மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்கு இலக்கானார்.

உடனடியாக வரணி பிரதேச மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பின்னர் அங்கிருந்து யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த மரணம் குறித்து யாழ். போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை நடத்தினார்.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)