
posted 5th September 2022
குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடு செய்யத் தடுப்பவர்கள் மீது கடுமையான விசாரணை
முல்லைத்தீவு குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தடையாக இருக்கின்றனர் என்றுகூறி தமிழ்த் தேசியக் கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர்மீது பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான து. ரவிகரன், க. சிவநேசன் ஆகியோரையே நேற்று (04) இவ்வாறு, பல மணி நேரம் முல்லைத்தீவு தலைமையக பொலிஸார் விசாரணைகளுக்கு உட்படுத்தினர்.
குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளை மேற்கொள்ளத் தடையாக இருக்கின்றனர் எனக் கூறி முல்லைத்தீவு மாவட்ட தலைமை பொலிஸ் நிலையத்தில் பிக்குகள் முறைப்பாடு செய்திருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர்களான செ. கஜேந்திரன், வினோநோகராதலிங்கம், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான து. ரவிகரன், க. சிவநேசன் ஆகியோருக்கு எதிராக அவர்கள் இந்த முறைப்பாட்டை செய்தனர்.
இதன்பிரகாரம், நேற்றைய தினம் தமிழ் கட்சிகளின் உறுப்பினர்களை முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்துக்கு வந்து வாக்குமூலம் அளிக்குமாறு பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான து. ரவிகரன், க. சிவநேசன் ஆகியோர் வாக்குமூலம் அளிப்பதற்காக வெள்ளிக் கிழமை (02) அங்கு சென்றனர். பாராளுமன்ற உறுப்பினர்களான செ. கஜேந்திரன், வினோநோகராதலிங்கம் ஆகியோர் சமுகமளிக்கவில்லை.
இந்நிலையில், வாக்குமூலம் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த ரவிகரன்,
குருந்தூர் மலையில் கடந்த ஜூன் 12ஆம் திகதி புத்தர் சிலையை நிறுவ எடுத்த முயற்சிக்கு மக்களுடன் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தோம். இந்த ஜனநாயகப் போராட்டத்தால் பௌத்த வழிபாடு தடுக்கப்பட்டதாக தெரிவித்து தேரர்களால் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், செய்தியாளர்களின் விவரங்களை கேட்டு நீண்ட விசாரணை நடத்தினர். நான் நினைக்கிறேன் எங்களை நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று. நாம் எந்த இடையூறுமின்றி ஜனநாயக வழியில் அன்று போராட்டத்தை நடத்தினோம்.
பொலிஸார் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டு சட்டத்தை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் நாம் இவ்வாறு போராட வேண்டி ஏற்பட்டிருக்காது என்று. ஆனால், இன்று ஜனநாயக வழியில் போராடிய எம்மை விசாரணைக்கு அழைத்துள்ளனர் என்றார்
இளைஞருக்குப் பாராட்டு
வீதியில் விழுந்து கிடந்த 2 பவுண் கைச்சங்கிலியை எடுத்த மூன்று இளைஞர்கள் அதனை மானிப்பாய் பொலிஸார் மூலமாக உரிமையாளரிடம் சேர்ப்பித்துள்ளனர்.
இளைஞர்களின் இந்தச் செயலுக்கு பொலிஸாரும் அப்பகுதியினரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது,
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாகியப்பிட்டியில் கடந்த வெள்ளிக் கிழமை (02) சங்கானை பகுதியை சேர்ந்த ச. சபேஷ் - வயது 32, ர. றெபீகன் வயது - 20, ம.கோகுலன் வயது - 25 ஆகியோர் சுன்னாகம் நோக்கிப் பயணித்துள்ளனர்.
அந்தச் சமயம் வீதியில் கிடந்த கைச்சங்கிலியை அவதானித்து அதனை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில், அந்தப் பகுதியை சேர்ந்த ஒருவர் தனது கைச்சங்கிலியை தவறவிட்டுள்ளார் என்று பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை அழைத்த பொலிஸார் நகையை கண்டெடுத்தவர்களையும் அழைத்து அவர்கள் மூலமாகவே அந்த நகையை உரிமையாளரிடம் வழங்க வைத்தனர்.
இந்நிலையில் மானிப்பாய் பொலிசார் குறிப்பிட்ட மூன்று இளைஞர்களின் முன்மாதிரியான செயல்பாட்டுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
அண்மைக் காலமாக யாழ்பாணத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் இம்மூன்று இளைஞர்களினதும் செயற்பாடு முன்னுதாரணமாகக் கொண்டு பிரதேச மக்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
செல்வச்சந்நிதி பெருந்திருவிழாவில் தீர்த்தத் திருவிழா
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி பெருந்திருவிழாவில் செவ்வாய்க்கிழமை (06) தொடக்கம் தீர்த்தத் திருவிழா வரை தினமும் பிற்பகல் நான்கு மணிக்கும் இரவு சுவாமி திருவீதியுலா நிறைவிலும் திருப்புகழ் பாமாலை இசைநிகழ்வு நடைபெறவுள்ளது.
தமிழகம் பழனி ஆலய ஓதுவார் திருமுறை இசைச்செல்வர் வெ. விக்னேஷ் ஆறுமுகம் பக்கவாத்திய சகிதம் இந்த இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
முட்கிளுவை முள்ளு குத்தி உயிரிழந்த வயோதிபர்
அனலைதீவு 7ஆம் வட்டாரத்தை சேர்ந்த குமாரசாமி தம்பிராசா (வயது -70) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கடந்த 31ஆம் திகதி அவருக்கு காலில் முள் குத்தியது. காலில் கொதி வலி இருப்பதாக அனலைதீவு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர்,அங்கிருந்து ஊர்காவற்றுறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் (02) உயிரிழந்தார்.
இறப்பு விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ந. பிறேமகுமார் மேற்கொண்டார்.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் நேற்று (03) உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
மனைவியின் மன உளைச்சலால் ஏற்பட்ட விபரீதம் - மன உளைச்சலின் காரணம்தான் என்ன?
நித்திரையாகவிருந்த கணவன் மீது அதிகாலை வேளையில் மனைவி தாக்கியதில் காயமடைந்தவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் (02) அதிகாலை பளை - புலோப்பளையில் இடம்பெற்றுள்ளது.
மனைவியின் தாக்குதலில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மனைவி மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மயான துப்பரவாக்குகையில் கவலையீனத்தால் சேமக்காலை கிளறுப்பட ஏற்பட்ட முறுகல்
வவுனியா, இராசேந்திரங்குளம் மயானத்தை தூய்மைப்படுத்தி அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை நேற்று (03) முன்னெடுக்கப்பட்ட போது அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது.
வவுனியா, இராசேந்திரங்குளம் மயானத்தின் ஒரு பகுதியில் கிறிஸ்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்படுகின்றது. ஒரு பகுதியில் இந்துக்களின் உடல் தகனம் செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், பிரதேச சபையின் அனுமதி பெற்று குறித்த மயானத்தை தனிநபர் ஒருவரின் நிதிப் பங்களிப்பில் தூய்மைப்படுத்தி சுற்றிவர நிழல் மரங்கள் நாட்டி, தகன கொட்டகை மற்றும் நீர்தாங்கி என்பவற்றை நிர்மாணிப்பதற்கு அபிவிருத்தி உத்தியோகத்தரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்காக மயானத்தை உழவு இயந்திரம் மூலம் துப்பரவு செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது நீண்ட காலத்திற்கு முன் கிறிஸ்தவர்களின் உடல் புதைக்கப்பட்டு அடையாளமின்றி காணப்பட்ட சில இடங்களும் உழவு இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்பட்டிருந்தது.
இதன்போது அங்கு வந்த கிறிஸ்தவ மதகுரு ஒருவரும், கிறிஸ்தவ மக்களும் தமது உறவினர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், சுத்தம் செய்தமையால் அவற்றின் இடங்களை கண்டு பிடிக்க முடியவில்லை எனத் தெரிவித்தும் அங்கு நின்ற அபிவிருத்தி உத்தியோகத்தருடன் முரண்பட்டனர்.
அவர் நிலைமையை மக்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தார். இருப்பினும், அதனை ஏற்க மறுத்த கிறிஸ்தவ மதகுரு நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் குறித்த நடவடிக்கைக்கு எதிராக மக்களை அழைத்துச் சென்று முறைப்பாடு பதிவு செய்தார்.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு உண்மை நிலையை அறிந்து அதனை கிறிஸ்தவ மக்களுக்கு தெளிவுபடுத்தியதுடன், கல்லறைகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை எனவும் உடல்கள் புதைக்கப்பட்டு அடையாளமின்றி இருந்தமையால் உழவு இயந்திரம் மூலம் சில இடங்கள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன.
எனவே, அந்த இடங்களை அடையாளம் தெரியும் படி மண் போட்டு உயர்த்தி விடுமாறு மக்களிடம் பொலிஸார் தெரிவித்தனர். இதனை மக்கள் ஏற்றுக் கொண்டனர். கிறிஸ்தவ, இந்து முரண்பாடுகளை ஏற்படாத வகையில் பொலிஸர் செயல்பட்டிருந்தனர். இதன்பின் அங்கு அமைதி நிலை ஏற்பட்டு தொடர்ந்தும் அபிவிருத்திச் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
சிறுப்பிட்டி விபத்தில் படுகாயமடைந்த குடும்பம்
சிறுப்பிட்டியில் இடம்பெற்ற விபத்தில் கணவன், மனைவி மற்றும் அவர்களின் பிள்ளை என மூவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் சனியன்று (03) மாலை 5 மணியளவில் காரும், மோட்டார் சைக்கிளும் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது.
இதில், 8 வயதுச் சிறுவன் கால் முறிந்த நிலையில் 48 வயதுடைய தந்தையும், 42 வயதுடைய தாயும் படுகாயமடைந்துள்ளனர்.
கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த மூவரும் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காரின் சாரதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிற்றுண்டிகளின் விலை அதிகரிப்பு
இலங்கையில்கொத்து ரொட்டின் ஒன்றின் விலை 100 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அகில இலங்கை சிற்றுண்டி சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை அதரிகரிப்பு காரணமாக உணவகங்களில் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், முட்டை ரொட்டி, பரோட்டா, மரக்கறி ரொட்டி மற்றும் றோல்ஸ் போன்ற சிற்றுண்டிகளின் விலைகளும் 10 முதல் 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY