
posted 2nd September 2022
சீனாவின் ஆதிக்கத்தை வடக்கிலே அனுமதிக்க முடியாது - செல்வம் அடைக்கலநாதன்
வடக்கிலே சீனாவின் ஆதிக்கத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று வியாழன் (01.09.2022) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
அண்மைக் காலமாக சீனாவினுடைய கப்பல் ஒரு சர்ச்சையாக இலங்கையிலே பேசப்பட்டது. இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் எச்சரிக்கையை மீறி அரசாங்கம் சீனக் கப்பலை உள்ளே அனுமதித்தது. தற்போது மீண்டும் சீனாவின் ஆதிக்கம் தொடர்வதாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
அந்தவகையிலே வடக்கில் சீனாவின் பிரதிநிதிகள், அவர்களுடைய முகவர்கள் கூடுதலாக களம் இறக்கப்பட்டிருக்கின்றனர்.
அட்டைப் பண்ணை, இறால் பண்ணை இவ்வாறு அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களை அதற்குள்ளே சிக்க வைத்து இந்தியாவுக்கு எதிரானவர்களாகக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை சீனா செய்கின்றது.
அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அயல் நாடான இந்தியாவின் பாதுகாப்பைத் தமிழர்கள் பாதுகாக்க வேண்டும் என்பது எங்கள் கடமையாக இருக்கின்றது. ஏனென்றால் கரையோர பகுதியில் இருப்பது தமிழர்களே.
வடக்கில் குறிப்பாக கரையோரப் பிரதேசங்களில் சீனாவின் கால் பதிப்பை அனுமதிக்க முடியாது என்றார்.
வரையறுக்கப்பட வேண்டிய கிளிநொச்சி நகர சபை எல்லை
கிளிநொச்சி நகர சபை எல்லை வரையறை தொடர்பில் பொது மக்கள் மற்றும் அமைப்புகளுடன் கலந்துரையாடி அதனை மீள்வரையறை செய்ய வேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. அருந்தவபாலன் அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில்;
முன்மொழியப்பட்டுள்ள கிளிநொச்சி நகர சபை எல்லை வரையறை தொடர்பாக அந்த நகரத்தில் வாழ்கின்ற ஒரு பகுதி மக்கள் தமது கவலைகளையும் ஆட்சேபனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.
நகரத்தை அண்மித்துள்ள சிலபகுதிகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ள, அதேவேளை 5 கி. மீ தூரம் வரையான பகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றும், புறக்கணிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின் தென்னிலங்கையிலும், மலைநாட்டிலிருந்தும் வந்து குடியேறிய மக்கள் அதிகமாக வாழ்ந்து வருவதால்தான் புறக்கணிக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.
மேலும், எல்லைகள் வரையறுக்கப்பட்ட போது மக்களுடனோ அங்குள்ள பொது அமைப்புகளுடனோ எவ்வித கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. எனவே, இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய காரணங்களையும் நியாயங்களையும் தெளிவுபடுத்த வேண்டும். தவறுதலாகவோ, அன்றி, வேண்டுமென்றோ அவ்வாறு நடைபெற்றிருந்தால் காலதாமதமின்றி எல்லைகளை மீள்வரையறை செய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றுள்ளது.
நீதி மன்றத்திலிருந்து தப்பி ஓடிய சந்தேக நபர்கள்
சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இருந்து இரண்டு சந்தேக நபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரும் கைது செய்ப்பட்டனர். இவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று வியாழன் (01) நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தில் சிறைக் காவலர்களின் பாதுகாப்பில் இருந்து அவர்கள் இருவரும் தப்பியோடியுள்ளனர்.
தப்பியோடியவர்களில் ஒருவர் மீளவும் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவரை கைது செய்வதற்கான நடடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கட்சி அலுவலகத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் பெண்ணின் சடலம் - அமைப்பாளர் கைது
ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை அலுவலகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டமை தொடர்பில் அந்தக் கட்சியின் கேகாலை அமைப்பாளர் லக்ஷ்மன் திஸநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்சி அலுவலகத்தில் நேற்று வியாழன் (01) காலை துப்பாக்கி சூட்டு காயங்களுடன் 36 வயது பெண்ணொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டனர்.
கேகாலை ஹபுதுவலயை சேர்ந்த பெண் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
விசாரணைகளின் போது கட்சியின் தொகுதி அமைப்பாளர் அந்த பெண்ணை அவரின் வீட்டிலிருந்து அழைத்து வந்தமை தெரியவந்துள்ளது இதனை தொடர்ந்து மேலதிக விசாரணைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)