பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குக - நிந்தவூர் பிரதேச சபையில் தீர்மானம்

“மக்களை அடக்கி, ஒடுக்கும் வகையில் அமைந்துள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்குவதுடன், மக்களின் அடிப்படை உரிமைகளை பாரிய அளவில் மீறும் வகையில் அமைந்துள்ள அதியுயர் பாதுகாப்பு வலய பிரகடன வர்த்தமானியையும் வாபஸ் பெற வேண்டும்” இவ்வாறு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தைக் கோரும் தீர்மானம் ஒன்று நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் ஏகமனதாக நிறைவேற்றறப்பட்டுள்ளது.

நிந்தவூர் பிரதேச சபையின் செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்த அமர்வு தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் தலைமையில் சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த மாதாந்த அமர்விலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிறீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சபைத் தவிசாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அதி உயர்பீட உறுப்பினருமான எம்.ஏ.எம். தாஹிர் தீர்மானம் தொடர்பிலான பிரேரணையை சபையில் முன்மொழிந்தார்.

பிரேரணையை முன்மொழிந்து தவிசாளர் தாஹிர் சபையில் உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“நாட்டு மக்களை இன்று இரு முக்கிய விடயங்கள் பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியிருப்பதுடன், மக்களின் ஜனநாயக உரிiமைகளுக்குப் பெரும் சவாலாகவும் அமைந்துள்ளன.
குறிப்பாக நாட்டில் அமூலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டமும், ஜனாதிபதியின் அதியுயர் பாதுகாப்பு வலய வர்த்தமானி பிரகடனமும் இன்று மக்கள் மத்தியில் பெரும் கலபரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் அடிப்படை உரிமைகளுக்குப் பெரும் சவாலாகவும், மக்களை அடக்கி ஒடுக்கும் அராஜகத்தை நோக்காகக் கொண்டதாகவும் இவை அமைந்துள்ளன.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு சட்டமே (தற்காலிக) மிகக் கொடூரமான சட்டமாக இன்றும் காணப்படுகின்றது.

தற்காலிக சட்டமாக நிறைவேற்றப்பட்ட இச்சட்டம், ஆறு மாதகாலத்திற்கு மட்டும் செல்லுபடியாக வேண்டியது 42 வருடங்களாக நீடித்து அநீதியை விளைவித்தும், அனேகமானவர்களுக்கு துன்பத்தினையும், கஷ்டங்களையுமே வழங்கியுள்ளது.

இந்த பயங்கரவாத தடைச்சட்டம் சிறுபான்மை மக்களுக்கே எதிரானது என்ற மாயை இதுவரை தோற்றவிக்கப்பட்ட போதிலும் அண்மைக் காலமாக அது பெரும்பான்மை மக்களை நோக்கியும் பாய்ந்துள்ளது.

இதனை பெரும்பாண்மை சமூகமும் இன்று உணரத் தொடங்கி விட்டதுடன், நாட்டில் நடைமுறையிலுள்ள இச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென்ற குரல்களும் எழுந்து வருகின்றன.

அதேவேளை பயங்கரவாத தடைச்சட்டதை முழுமையாக நீக்குவதாக தாம் வழங்கிய வாக்குறுதியை அரசு நிறைவேற்றுவதற்கு பொறுப்பேற்க வலியுறுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு வலுசேர்ப்பது போல் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை காங்சேன்துறை முதல் ஹம்பாந்தோட்டை வரை சகல இன மக்களினதும் பேராதரவுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் தான் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாரிய அளவில் மீறக்கூடியதென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற அமைப்புகளே ஆட்சேபிக்கும் அதியுயர் பாதுகாப்ப வலய பிரகடனமும் ஜனாதிபதியால் செய்யப்பட்டுள்ளது.

எனவே, நாட்டு மக்களின் நலன் கருதி உடனடியாகப் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவும், அதியுயர் பாதுகாப்பு வலய வர்த்தமானி பிரகடனத்தை இரத்துச் செய்யவும் ஜனாதிபதியும் அரசும் ஆவன செய்ய வேண்டும்” என்றார்.

பிரேரணை ஏக மனதாக நிறைவேறியது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குக - நிந்தவூர் பிரதேச சபையில் தீர்மானம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)