
posted 15th September 2022
சம்மாந்துறை மண், வரலாற்றில் கண்ட ஆளுமை மிகு தளபதியாக வாழ்ந்த முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி அன்வர் இஸ்மாயில் எம்மை விட்டு பிரிந்து ஒன்றரை தசாப்தம் கடந்துள்ளது என்பதை எண்ணிப்பார்க்கும் போது காலத்தின் வேகம் கூடியிருப்பதை உணர்கிறேன். இவ்வாறு முன்னாள் அமைச்சர் எம்.ஐ. அன்வர் இஸ்மாயிலின் 15 ஆவது நினைவு தினத்தையொட்டி முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்த நினைவேந்தல் செய்தியில் மேலும் அவர் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
சக பாராளுமன்ற உறுப்பினராக, நல்ல நண்பனாக, சம்மாந்துறை மண்ணை நேசித்த மக்கள் பிரதிநிதியாக, சமூகத்தின் அவலங்களை சீற்றத்துடன் அணுகிய மக்கள் தலைவனாக, முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படும் போது அதனிலிருந்து சமூகத்தை காக்க போராடிய போராளியாக நான் கண்ட முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி அன்வர் இஸ்மாயில் தலைவர் அஷ்ரபின் பக்கத்திலிருந்து அரசியல் கற்ற இன்னுமொருவர்.
இளமையில் இருந்து சமூகப் பணிகளில் அக்கறை செலுத்தி, அரசியல் மேடைகளில் ஆர்வத்துடன் இயங்கிய நல்ல பேச்சாளன். இலங்கையில் இஸ்ரேலியத் தூதரகம் திறப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்ற போது அதற்கு எதிராக செயற்பட்டதனால் அரசினால் கைது செய்யப்பட்ட வீரன். எமது அன்வர் இஸ்மாயில் 1990களில் பெருந்தலைவர் அஷ்ரப் பிரகடனப்படுத்திய 'கறுப்பு வெள்ளி' போராட்டதில் இளைஞராக இருந்த அன்வர் இஸ்மாயில் எங்களுடன் இணைந்து முக்கிய பங்கெடுத்தார். அரசியல் ரீதியாக பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்த அவர், அப்போதே இளைஞர்கள் மத்தியில் கவர்ச்சிகரமான ஒருவராக திகழ்ந்தவர். கிழக்கில் புலிகளின் ஆதிக்கம் கூடி முஸ்லிங்களின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்பட்ட போது நாங்கள் முன்னின்று போராடிய பொழுதுகளில் அரச தலைவர்களிடம் முஸ்லிங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி உரத்து குரல்கொடுத்த அவரின் வார்த்தைகள் இன்றும் என்னுள் அசைப்போடுகிறது.
இலங்கை அரசியல் வரலாற்றில் குறுகிய காலத்தில் தனக்கென தனியானதொரு இடம் பிடித்துக் கொண்ட ஒரு இளம் தலைவராக முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி மர்ஹூம் எம்.ஐ. அன்வர் இஸ்மாயில் திகழ்ந்தார். உலகை உலுக்கிய சுனாமி தினத்தன்று முதல் பல மாதங்கள் அம்பாறை மாவட்ட கரையோர மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த சம்மாந்துறை மண்ணுக்கு அந்த காலப்பகுதியில் தலைமை கொடுத்த அன்வர் இஸ்மாயில் அந்த காலப்பகுதியில் முன்னெடுத்த வேலைத் திட்டங்களும், முக்கிய முடிவுகளும் இன்றும் சிலாகித்து பேசப்படக் கூடியது.
கிழக்கு மாகாண உட்கட்டமைப்புப் பிரதி அமைச்சராக, நீர்ப்பாசன அமைச்சராகவெல்லாம் நியமிக்கப்பட்ட அன்வர் இஸ்மாயில் பல நீர்ப்பாசனத் திட்டங்களை தொடக்கி வைத்தார். மர்ஹும் அஷ்ரஃபின் மறைவுக்குப் பின்னர் அவரின் கனவை நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயற்பட்டு வெற்றிகண்ட அவரின் சேவைகள் இன்றும் உறுதியுடன் இருக்கிறது. நண்பர் அன்வர் இஸ்மாயிலின் இழப்பு முஸ்லிம் அரசியலுக்கு மட்டுமல்ல, சம்மாந்துறை மண்ணுக்கு மட்டுமல்ல எனக்கும் தனிப்பட்டவகையில் பேரிழப்பகவே பார்க்கிறேன். நல்ல நண்பனை இழந்து 15 ஆண்டுகள் கடந்துள்ளது.
தன்னை பதவிகளை கொண்டு அலங்கரித்த மக்களுக்கு அவர் வழங்கிய சேவைகள், மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் அவர் செய்த நல்லமல்கள் எல்லாவற்றையும் இறைவன் ஏற்று உயரிய ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கிட இறைவனை பிராத்திக்கிறேன்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)