
posted 6th September 2022
தொண்டைமானாறில் முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதால் ஆற்றின் குறுக்கே இரும்பு கம்பியினாலான வேலி அமைக்கப்பட்டுள்ளது.
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த பெருந்திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது.
இதில் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களில் இருந்தும், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பலர் பங்கேற்று வருகின்றனர். ஆலயத்திற்கு வருவோரில் பெரும்பாலானோர் தொண்டைமானாறிலேயே நீராடி முருகனை வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆற்றில் முதலைகளின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டது. இதையடுத்து, ஆற்றில் நீராடுபவர்களை அவதானமாக இருக்குமாறு ஆலய நிர்வாகத்தினர் அறிவித்திருந்தனர். தற்போது ஆற்றின் குறுக்காக இரும்பு கம்பியாலான வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இரும்புவேலி முதலைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி நீராடுபவர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ள நிர்வாகம், முதலைகளை அங்கிருந்து அகற்ற பல தரப்புகளுடனும் பேச்சுகளை நடத்தி வருவதாகத் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)